2017-04-06 16:48:00

முதிர்ந்த வயதினரைப் பராமரித்தல் இன்றைய சவால்


ஏப்.,06,2017. உலக மக்கள் தொகையின் சராசரி வயது கூடிவரும் இன்றையச் சூழல், நமக்கு புதிய சவால்களையும், வாய்ப்புக்களையும் வழங்குகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. பொது அவையில் உரையாற்றினார்.

நியூ யார்க் நகரில் செயல்படும் ஐ.நா. தலைமையகக் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், 'மாறிவரும் மக்கள் சமுதாயத்தின் வயது கட்டமைப்பும், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்றமும்' என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் இவ்வாறு உரையாற்றினார்.

வெடித்தெழும் மக்கள் தொகை என்ற அச்சம் உருவாக்கப்பட்டதன் காரணமாகவும், மருத்துவ உலகின் உதவியால் மக்களின் வாழும் காலம் வளர்ந்திருப்பதாலும், சமுதாயத்தின் சராசரி வயது கூடியுள்ளது என்று, பேராயர் அவுசா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இத்தகையைச் சூழலில், முதிர்ந்த வயதினரைப் பராமரித்தல், வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்குத் தேவையான வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் என்பவை நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள முக்கியமான சவால்கள் என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்றம் என்ற கோணத்தில் சிந்திக்கும்போது, இயற்கை வளங்களை, தேவைக்கும் அதிகமாக வீணாக்கும் போக்குகளை கட்டுப்படுத்துவதும், மனித சமுதாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.