2017-04-07 15:11:00

சீன தலத்திருஅவையில், குருத்தோலை ஞாயிறு நிதி


ஏப்.,07,2017. ஏப்ரல் 9, வருகிற ஞாயிறு கொண்டாடப்படும் குருத்தோலை ஞாயிறன்று, சீனாவின் கத்தோலிக்கச் சமுதாயம், தேவையில் இருப்போருக்கு உதவும் நோக்கத்துடன், நிதி திரட்டும் திட்டம் ஒன்றை, முதல்முறையாக மேற்கொள்ளவிருப்பதாக பீதேஸ் செய்தி கூறுகிறது.

சீனாவில் உள்ள தலத்திருஅவையை ஒருங்கிணைக்கவும், சீன கத்தோலிக்கர்களின் நம்பிக்கை, பிறரன்பு என்ற உணர்வுகளை மற்றவர் அறிந்துகொள்ளவும் இந்த முயற்சி பெரிதும் உதவியாக இருக்கும் என்று Su Zhou மறைமாவட்டத்தின் ஆயர், Joseph Xu Hong Gen அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக, சீனாவில் பிறரன்பு பணிகளை மேற்கொண்டு வரும் Jinde பிறரன்பு அமைப்பு, இந்த முயற்சியைத் துவக்கியுள்ளது என்றும், திரட்டப்படும் நிதி, இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி திரட்டும் ஆரம்ப முயற்சியாக 7,500 யூரோக்கள் வழங்கியுள்ள Gui Zhou மறைமாவட்டத்தின் ஆயர் Xiao Ze Jiang அவர்கள், 2008ம் ஆண்டு, தங்கள் மறைமாவட்டம், பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டபோது, மற்றவர்கள் அளித்த உதவிக்கு நன்றியாக, தற்போது இந்த நிதி உதவியை தங்கள் மறைமாவட்டம் வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.