2017-04-07 14:30:00

திருத்தந்தை : பாலியானோ சிறையில் புனித வியாழன் திருவழிபாடு


ஏப்.07,2017. “தவக்காலம், மனம் வருந்துதலின் காலம். நம் திருமுழுக்குத் தனித்துவத்தைப் புதுப்பித்து, நாம் கிறிஸ்துவோடு உயிர்ப்பதற்கு உதவும் நோக்கத்தை இது கொண்டுள்ளது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு புனித வியாழன் நம் ஆண்டவரின் இறுதி இராவுணவு திருப்பலியை, இத்தாலியின் பாலியானோ (Paliano) சிறையில் நிறைவேற்றி, கைதிகளின் காலடிகளைக் கழுவுவார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

உரோம் நகருக்கு தெற்கே அமைந்துள்ள பாலியானோ சிறையில், ஏப்ரல் 13, வருகிற வியாழன் மாலையில், இயேசுவின் இறுதி இராவுணவு திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, கைதிகள் சிலரின் காலடிகளைக் கழுவுவார் என்று, இவ்வியாழனன்று திருப்பீடம் அறிவித்தது.

இதற்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டில், உரோம் நகர் Casal del Marmo இளையோர் தடுப்பு முகாமிலும், 2015ம் ஆண்டில், உரோம் நகர் புனித Rebibbia சிறையிலும், புனித வியாழன் திருவழிபாட்டை நிறைவேற்றி, கைதிகளின் காலடிகளைக் கழுவியுள்ளார்.

2014ம் ஆண்டில், உரோம் நகர் Don Gnocchi மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு இல்லத்திலும், 2016ம் ஆண்டில், Castelnuovo di Portoவிலுள்ள, புகலிடம் தேடும் புலம்பெயர்ந்தோர் மையத்திலும், இத்திருவழிபாட்டை நிறைவேற்றினார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித வியாழன் திருவழிபாடு நிறைவேற்றிய சிறைகளில், பெண்கள் உட்பட, இந்து மற்றும், முஸ்லிம் சமயக் கைதிகளின் காலடிகளைக் கழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.