2017-04-10 16:43:00

இயேசுவின் முகத்தை ஏழைகளில் கண்டு தியானித்தல்


ஏப்.,10,2017. இயேசுவை ஒரு மன்னராக எருசலேமில் வரவேற்றது குறித்த மகிழ்வை மட்டும் நாம் கொண்டாடாமல், தன் இறப்பிற்கு முன் அவர் அனுபவித்தத் துன்பங்களைக் குறித்தும் தியானிக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்து ஞாயிறன்று, உரோம் நகரின் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, தன் மரணத்திற்கு முன்னர் அனுபவித்தத் துன்பங்களை, இன்று, போர், வன்முறை மற்றும் அடிமைத்தனங்களால் துன்புறும் மக்களில் நாம் கண்டு தியானிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

புகைப்படங்களிலும், ஒலி ஒளிக் காட்சிகளிலும், இணையத்தளத்திலும் நாம் காணும் இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்தை நோக்கி மட்டும் தியானிக்க நாம் அழைப்புப் பெறவில்லை, நம் அயலாரின் துன்பங்களில் இயேசுவின் துன்பத்தையும் உற்று நோக்கி தியானிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என உரைத்தார், திருத்தந்தை.

இன்று, துன்புறும் மக்களில் நாம் காணும் இயேசு, அன்று எருசலேமில் மன்னராக வரவேற்கப்பட்ட அதே இயேசுவே எனவும் உரைத்த திருத்தந்தை, குருத்து ஞாயிறு என்பது, மகிழ்ச்சி மற்றும் வரவிருக்கும் துன்பத்தை உள்ளடக்கிய நாள் எனவும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.