2017-04-10 16:46:00

எகிப்து கோவில் மீது தாக்குதல் குறித்து திருத்தந்தை கவலை


ஏப்.,10,2017. எகிப்தில் Tanta நகர் காப்டிக் கிறிஸ்தவ கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்தோலை திருவிழா திருப்பலிக்குப்பின் நண்பகல் மூவேளை செபத்தை விசுவாசிகளோடு இணைந்து செபிப்பதற்குமுன்னர் உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதல் குறித்து, தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாகவும், அச்சம், வன்முறை, மரணம் போன்றவற்றை விதைப்பவர்களும், ஆயுதக் கடத்தல்களில் ஈடுபடுபவர்களும், மனம் மாறவேண்டும் என செபிப்பதாகவும் தெரிவித்தார்.

குருத்தோலை திருவிழாவைச் சிறப்பிக்க, ஞாயிறன்று எகிப்தின் Tanta நகர் காப்டிக் கிறிஸ்தவக் கோவிலில் விசுவாசிகள் கூடியிருந்தபோது, குண்டு ஒன்று வெடித்து 27 பேரின் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

சிறிது நேர இடைவெளியில், அலெக்சாந்திரியாவின் கிறிஸ்தவக் கோவிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விரு வெடிகுண்டு விபத்துக்களிலும் 44 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

இம்மாதம் 28, 29 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் மேற்கொள்ளும் திருப்பயணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை திருப்பீடம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுவீடன் தலைநகர் இஸ்டாக்ஹோமில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற கனரக வாகன தாக்குதல் குறித்தும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.