2017-04-10 15:54:00

வாரம் ஓர் அலசல் – கசப்பும் இனிப்பும்


ஏப்.10,2017. ஏப்ரல் 14, வருகிற வெள்ளி புனித வெள்ளி, டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள். சித்திரை மாதப் பிறப்பு. சித்திரை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டாக, இன்றும் பலரால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாள் பற்றி இணையத்தில் தேடியபோது இவ்வாறு ஒரு தகவல் கிடைத்தது. சித்திரை முதல் நாளில் பிரம்மன் உலகைப் படைத்தார் என, சில ஞான நூல்கள் சொல்கின்றன. சித்திரை முதல் நாளன்று, திறந்த வெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், சித்திரை முதல் நாளை, புனித தினமாகக் கொண்டாடுகின்றனர். கேரளாவில் இந்நாள், ‘சித்திரை விஷு’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க, வெள்ளி நாணயங்கள், நகைகள், நவரத்தினங்கள், பழ வகைகள், காய் வகைகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும், அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இது ‘விஷுக்கணி’ (விஷுக் காட்சி) எனப்படுகிறது. பிறகு, கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசீர் பெறுவார்கள். அன்றைய நாளில், வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு. இதை ‘விஷுக் கைநீட்டம்’ என்பர். தமிழகத்தில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், வேப்பம்பூக்களைச் சேகரித்துப் பச்சடி செய்து சாப்பிடுவார்கள். கசப்பும் இனிமையும் கலந்தது வேப்பம்பூ பச்சடி. இதேபோல் வாழ்க்கையும், கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் என்பதை இது உணர்த்துகிறது.

காரத்தை உணராத நாவினால், இனிப்பின் முழுமையான சுவை என்னவென்று, ஒருபோதும் உணர முடியாது. அதேபோல், தோல்வியைத் தழுவாத ஒருவரால் ஒருநாளும் வெற்றியின் முழுமையான மகிழ்ச்சியை உணர முடியாது. வாழ்வியல் சிறக்க பொன்மொழிகள் கூறியுள்ள சுவாமி விவேகானந்தர் அவர்களும், “உன் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையையும் நீ எப்போது சந்திக்காமல், முன்செல்கிறாயோ, அப்போது நீ, தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்” எனச் சொன்னார். ஆக, வாழ்க்கை இன்பமும் துன்பமும், வெற்றியும் தோல்வியும், இனிப்பும் கசப்பும் கலந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், குருத்து ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுகையில், குருத்தோலை ஞாயிறு “கசப்பும்இனிப்புமானது”என்று சொன்னார். இத்திருப்பலியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, ஏறக்குறைய ஐம்பதாயிரம் விசுவாசிகள் கலந்துகொண்டனர். இஞ்ஞாயிறு 32வது உலக இளையோர் நாள் என்பதால்,  ஏராளமான இளையோரும் இதில் பங்கு பெற்றனர். இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, குருத்தோலை ஞாயிறு, இன்பமும், துன்பமும் கலந்தது என்றார். இயேசு, வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமுக்குள் நுழைந்ததையும், அவரின் பாடுகளையும் இஞ்ஞாயிறு நினைவுபடுத்துகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ் .

இயேசுவை நம் அரசராக மகிழ்வோடு அறிவிக்கும் நாம், அவர் எதிர்கொண்ட அவமானங்கள், அவதூறுகள், பழிச்சொற்கள், மறுதலிப்புகள், அநீதியான தீர்ப்பு, பெற்றுக்கொண்ட சாட்டையடிகள், முள்முடி, சிலுவை சுமந்தது, இறுதியில் சிலுவையில் அறையப்பட்டது என, எல்லாவற்றையும் நினைத்துப் பார்ப்போம். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்(மத்.16:24) என, இயேசு தம் சீடரிடம் தெளிவாகப் பேசியுள்ளார். இயேசு, தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு மதிப்பையும் வெற்றியையும் ஒருபோதும் உறுதியளித்தது கிடையாது. பாடுகள் மற்றும், சிலுவை வழியாகவே இறுதி வெற்றியை எட்ட முடியும். இதுவே தமது பாதை என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். எருசலேமில், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்த கூட்டத்தினரே, சிலுவையில் அறையும் என, விரைவிலே கூச்சலிடுவார்கள் என்பதை இயேசு நன்றாக அறிந்திருந்தார். படங்கள், புகைப்படங்கள், இணையதளங்களில் பிரசுரிக்கப்படும் காணொளிகளில் மட்டும் தம்மைத் தியானிக்க வேண்டுமென்று இயேசு கேட்கவில்லை, ஆனால், அடிமைத் தொழிலால், குடும்பத்தின் துன்பங்களால், நோய்களால், போர்களால், பயங்கரவாதத்தால், எந்நேரமும் தாக்குவதற்குத் தயாராக உள்ள ஆயுதங்களால்.. இவ்வாறு, தம்மைப்போல் இன்று துன்பங்களை அனுபவிக்கும் மனிதர்களில் இயேசு பிரசன்னமாக இருக்கிறார். அவர்களை ஏற்று அன்புகூருமாறு இயேசு கூறுகிறார். என்றார் திருத்தந்தை . ஏமாற்றப்படும், மாண்பை இழக்கும், புறக்கணிக்கப்படும் மனிதர்களில் இயேசு இருக்கிறார். எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த அதே இயேசுவே, இரு குற்றவாளிகளுக்கு இடையே சிலுவையில் தொங்கி உயிர்விட்டார். இவ்வாறெல்லாம் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் .

கசப்பும் இனிமையும் கலந்து வருவதே வாழ்க்கை. இந்த நிதர்சனமான உண்மையை அறிந்தவர்கள், எத்தனை இடர்கள் வரினும் துணிந்து நடைபோட்டு வெற்றிக்கனியைப் பறிக்கிறார்கள். கடந்த வாரத்தில் (தினமலர் ஏப்.05,2017) பிரித்திகா யாஷினி அவர்கள் பற்றி ஊடகங்களில் ஒரு தகவல் வெளியானது. இவர் இப்போது தருமபுரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கிற்கான சப்-இன்ஸ்பெக்டர். இவர், இந்த நிலையை எட்டுவதற்கு, வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் வலியுடனே கடந்து வந்திருக்கிறார். மூன்றாம் பாலினத்தவராகிய இவர், தனிமையையும், தீண்டாமையையுமே தங்கள் வாழ்வின் சீதனங்களாகக் கொண்டு வாழும் இந்த இனத்தவரின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், முதல் புள்ளியாய் அமைந்திருக்கிறார்.

சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கலையரசன்-சுமதி தம்பதியருக்கு இரண்டு ஆண் மகன்கள். இவர்களில், இரண்டாவது மகன் பிரதீப் குமார். இவர் பிளஸ் டூ படிக்கும் போது தனக்குள் பெண்மை மலர்வதை உணர்ந்திருக்கிறார், தான் ஓர் ஆண் இல்லை என்பதை குடும்பத்தாரிடம் உணர்த்தியிருக்கிறார். பெற்றோருக்கு இது புரியாமல், மந்திரவாதியை அழைத்தனர். மந்திரவாதியும், வாங்கிய காசுக்கு பிரதீப் குமாரை அடி அடியென அடித்து உடலை இரணமாக்கிவிட்டு சென்று விட்டார் இந்தப் போராட்டத்திற்கு நடுவில் கல்லுாரியில் சேர்ந்து பிசிஏ முடித்து பட்டதாரியாகவும் ஆனார் பிரதீப்குமார். தனது நல்ல, ஆனால் விபரம் புரியாத பெற்றோர்க்கு, தன்னால் அவமானமும் தொல்லையும் வேண்டாம் என்று எண்ணி, வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்து சேர்ந்தார் பிரதீப் குமார். மூன்றாம் பாலினத்தவருக்கு அன்புகாட்டி அரவணைக்கும் 'தோழி' அமைப்பு இவருக்கு அடைக்கலமும் தந்து, வேலை வாய்ப்பும் வாங்கிக் கொடுத்தது. சிறுகச் சிறுகச் சேமித்து, மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுமையான பெண்ணாக மாறினார் இவர். பின்னர், பிரதீப் குமார், பிரித்திகா யாஷினியானார். இவரது வாழ்க்கையில் சிரித்ததைவிட அழுததே அதிகம், அப்பொழுதெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்து அன்பு செலுத்திய தனது தோழி யாஷினியின் பெயரை, பின்பெயராக வைத்து தோழிக்கு பெருமை சேர்த்தார் இவர். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தார். ஆண், பெண் என்ற இரு பாலினத்திற்குத்தான் தேர்வு. நீங்கள் இதில் வரவில்லை என்று கூறி, தேர்வாணையம் இவரது விண்ணப்பதை நிராகரித்தது. மூன்றாம் பாலினம் என்று, ஒன்று இருக்கும்போது அதைச் சொல்லாதது ஆக்கியது உங்கள் குற்றமே தவிர, என் குற்றம் இல்லை என்று மீண்டும் நீதிமன்றம் சென்றார். மூன்றாம் தேதி எழுத்துத்தேர்வு இருந்த போது இரண்டாம் தேதி இரவுதான் அனுமதி கிடைத்தது. தேர்வில் 28.5 மதிப்பெண் எடுத்திருந்திருந்தாலும், நீங்கள் எடுத்த மதிப்பெண் போதாது என்று தேர்வாணையம் சொல்லி விட்டது. பெண்களுக்கு கட் ஆப் மதிப்பெண் 25தான். நான் ஒரு பெண். தேவையான மதிப்பெண்கள் வாங்கியுள்ளேன் என்று மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்றார் இவர். நீதிமன்றம் இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு உடல்திறன் போட்டி, குண்டு எறிதல் மற்றும், ஈட்டி எறிதலில் தேர்ந்தாலும், ஓட்டத்தில் ஒரு நொடி தாமதாக வந்தார் என்று சொல்லி மீண்டும் பிரித்திகாவை நிராகரித்தனர். பிரித்திகா விடவில்லை, மீண்டும் நீதிமன்றம் படியேறினார். நான் ஓடிய காணொளியைப் பாருங்கள், ஒரு நொடியை காரணம் காட்டி என் வாழ்வை பாழாக்கிவிடாதீர் என்று கெஞ்சினார். இறுதியில் அவரது முயற்சி வென்றது.

பிரித்திகா யாஷினி அவர்கள், தற்போது சட்டம் ஒழுங்கிற்கான சப்-இன்ஸ்பெக்டர். நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யக் கிடைத்த அற்புதமான இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வேன். எனது அடுத்த கனவு IPSதான் என்று, தினமலர் நிருபரிடம் சொல்லியிருக்கிறார் இவர். அன்பர்களே, பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின்  பகிர்வு ஒன்று யுடியூப்பில் பிரசுரமாகியிருந்தது. என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை உங்களோடு பகிரந்து கொள்கிறேன் என, அதில் அவர் சொல்லியிருக்கிறார்...

இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை. இவ்வாழ்வில், கோபம், பகை, வெறுப்பு காழ்ப்புணர்வு, பழிவாங்கும் உணர்வு போன்றவற்றை மறந்து, புண்படுத்தியவர்களை மன்னித்து, நாம் புண்படுத்தியவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, மன அமைதியில் வாழ்வோம். இந்தப் புனித வாரத்தில் இவ்வாறு வாழ அதிகமாக முயற்சி எடுப்போம். வாழ்க்கை குறுகியது, இனிப்பும் கசப்பும் கலந்தது, ஆனால், அழகானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.