2017-04-11 15:43:00

உரிமைகளுக்கான போராட்டத்தில் வன்முறை வேண்டாம்


ஏப்.11,2017. வன்முறையைப் பயன்படுத்தாமல் நம் உரிமைகளுக்காகப் போராட வேண்டுமென, வெனெசுவேலா நாட்டு கர்தினால் ஹோர்கே உரோசா சவினோ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் கடும் நெருக்கடி நிலைகள் நிலவிவரும்வேளை, குருத்து ஞாயிறு மறையுரையில் இவ்வாறு கூறிய, கரகாஸ் பேராயர் கர்தினால் உரோசா அவர்கள், அமைதியைக் காத்து, பிறரைப் புரிந்துகொண்டு, அறிவுப்பூர்வமாகச் செயல்படுமாறு வலியுறுத்தினார்.

புனித வாரத் திருவழிபாடுகளில் நாட்டினர் அனைவரும் கலந்துகொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காகச் செபிக்குமாறு கூறிய கர்தினால், வன்முறையில் இறங்காமல், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைப் பின்பற்றுமாறு பரிந்துரைத்தார்.

மேலும், வெனெசுவேலா நாட்டில், இத்திங்களன்று, பிரான்சிஸ்கன் அருள்சகோதரர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளைச் சிலுவை பிரான்சிஸ்கன் சகோதரர்கள் சபையின் அருள்சகோதரர் தியோகோ பெகோலா (Diego Begolla) அவர்கள், அதிகாலையில் இறந்து கிடந்தார் எனவும், அவரது கழுத்தில் கத்தியால் குத்திய காயம் இருந்ததெனவும் அச்சபையினர் கூறியுள்ளனர்.

இக்கொலைக்கு, திருட்டு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.