2017-04-11 15:57:00

பாகிஸ்தானில் அமைதியின் அடையாளமாக ஒலிவ மரங்கள்


ஏப்.11,2017. பாகிஸ்தானில் அமைதி, சமய மற்றும், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் அடையாளமாக, நாடெங்கும் ஒலிவ மரங்களை நடுவதற்கு, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தீர்மானித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழுவின் தலைவரான பேராயர் செபஸ்தியான் பிரான்சிஸ் ஷா அவர்கள், இம்முயற்சி பற்றி, பீதேஸ் செய்திக்கு அனுப்பியுள்ள தகவலில், பள்ளிகள், ஆலயங்கள், மசூதிகள், மதராசப் பள்ளிகள், குருத்துவக் கல்லூரிகள், மற்றும் ஏனைய, கிறிஸ்தவ முஸ்லிம் நிறுவனங்களின் வளாகங்களில் ஒலிவ மரங்கள் நடப்படும் என்று கூறியுள்ளார்.

எப்பொழுதும் பசுமையாக உள்ள ஒலிவ மரம், நிலைத்த வளமை, மகிழ்வு, அமைதி, ஞானம், வல்லமை மற்றும் தூய்மையின் அடையாளம் என்றும், பழைய ஏற்பாட்டில் பெருவெள்ளம் முடிந்ததன் அடையாளமாக, நோவா அனுப்பிய புறா ஒலிவக் கிளையைக் கொண்டு வந்தது என்றும், பேராயர் ஷா அவர்கள் தெரிவித்தார்.

மேலும், முஸ்லிம் இளையோர் அமைதியை அன்புகூர்பவர்களாக மாறுவதற்கு உதவும் நோக்கத்தில், முஸ்லிம் சமயப் பயிற்சி நிலையங்களில் ஒலிவக் கன்றுகளை நடுவதற்கு, முஸ்லிம் தலைவர்கள் அவற்றைத் தங்களிடம் கேட்கின்றனர் என, பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழுவின் செயலர் அருள்பணி பிரான்சிஸ் நதீம் அவர்கள் கூறினார். 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.