2017-04-11 15:55:00

பார்வைக்குறைபாடுள்ள மாணவி ஐ.ஐ.எம் கல்லூரியில் சேர்ந்து சாதனை


ஏப்.11,2017. மக்குலார் தேய்வு (Macular Dystrophy)  என்ற பார்வை குறைபாட்டுடன் பிறந்த பிராச்சி சுக்வானி (Prachi Sukhwani) என்ற 21 வயது நிரம்பிய மாணவி, அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த இவருக்கு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே 80 விழுக்காடு பார்க்கும் திறனை இழந்துள்ளார். இது மரபணு குறைபாடு என்பதால், இதனைச் சரிசெய்வதற்கு தற்போது வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் தன்னுடைய முயற்சியால், Maharaja Sayajirao பல்கலைக்கழகத்தின் வணிகயியல் துறையில் பி.பி.ஏ பட்டம் பெற்று, பின் தன்னுடைய பலநாள் கனவான ஐ.ஐ.எம்மில் படிக்க வேண்டும் என்பதற்காக, கேட் (CAT) நுழைவுத் தேர்வையும் எழுதினார் பிராச்சி சுக்வானி.

இத்தேர்வில், நூற்றுக்கு 98.55 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றதால், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் உட்பட, மூன்று சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. இதனால் அவர் தன்னுடைய பல ஆண்டுகள் கனவான ஐ.ஐ.எம் அகமதாபாத்தையே தேர்ந்தெடுத்து கனவை நினைவாக்கிக் கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும், அதன்பின் சொந்தமாகத் தொழில் துவங்க வேண்டும், அதைத் தொடர்ந்து பார்வையற்றவர்களுக்காக ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : தினத்தந்தி/TNN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.