2017-04-11 15:53:00

வாரணாசியில் குருத்தோலை பவனியில் ஆகாயத் தாமரைகள்


ஏப்.11,2017. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், நதிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிறிஸ்தவர்கள், ஆகாயத் தாமரைகளை ஏந்தி குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடினர் என, ஆசியச் செய்தி கூறியது.

வாரணாசி கிறிஸ்தவர்கள், குருத்தோலை பவனியில், குருத்தோலைகளுக்குப் பதிலாக, இந்து மதத்தினருக்குப் புனித நதியாக விளங்கும் கங்கை நதியில் கலக்கும் இரு முக்கிய கிளை ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆகாயத் தாமரைகளை ஏந்திச் சென்றனர்.

இந்நடவடிக்கையை முன்னின்று நடத்திய, இந்திய மறைப்பணி கழகத்தின் அருள்பணியாளர்கள் ஆனந்த், பிரவீன் ஜோசி ஆகிய இருவரும், கிளை நதிகளின் மோசமான நிலைமைகளை, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில், இவ்வாறு குருத்தோலை பவனி நடத்தியதாகத் தெரிவித்தனர்.

வாரணாசி நகரின் பெயர்க் காரணமான, வருணா மற்றும் ஆசி ஆறுகளில் சேகரிக்கப்பட்ட ஆகாயத் தாமரைகள் இப்பவனியில் எடுத்துச் செல்லப்பட்டன எனவும், இதன் வழியாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இளையோருக்குத் தூண்டி வருவதாகவும், இவ்விரு அருள்பணியாளர்களும் தெரிவித்தனர்.

கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, இந்திய மறைப்பணி கழகத்தின் தகவல் தொடர்பு மையமான விஷ்வ ஜோதி தொடர்பு மையம், எல்லா மதங்களின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து நடத்திய கூட்டத்தில், ஆறுகளைச் சுத்தம் செய்வதற்கு உறுதி கூறப்பட்டது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.