2017-04-12 15:50:00

வன்முறைகள் இறுதியில் வெற்றி அடையப்போவதில்லை


ஏப்.,12,2017. உயிர்ப்பில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையை, கிறிஸ்து, நம் உள்ளங்களில் தொடர்ந்து காப்பாற்றி, நம்மை அரவணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று, எகிப்து கத்தோலிக்க காப்டிக் தலத்திருஅவையின் தலைவர், முதுபெரும் தந்தை, Ibrahim Isaac Sidrak அவர்கள் கூறினார்.

குருத்து ஞாயிறன்று, ஆர்த்தடாக்ஸ் காப்டிக் கோவில்கள் இரண்டில் நிகழ்ந்த படுகொலைகளைத் தொடர்ந்து, தன் கருத்துக்களை, பீதேஸ் செய்திக்கு வெளியிட்ட முதுபெரும் தந்தை, Sidrak அவர்கள்,  ஆர்த்தடாக்ஸ் காப்டிக் திருத்தந்தை, 2ம் Tawadros அவர்கள், பேசவும் இயலாத வண்ணம், வேதனையின் ஆழத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பின்னரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணத்தை இரத்து செய்யாமல் இருப்பது, வன்முறைகளும், இரத்தம் சிந்துதலும் இறுதியில் வெற்றி அடையப்போவதில்லை என்பதை உணர்த்துகிறது என்று முதுபெரும் தந்தை, Sidrak அவர்கள், எடுத்துரைத்தார்.

மதத்தின் பெயரால் இளையோர் மனங்களில் விதைக்கப்படும் வெறுப்பு விதைகளை வேருடன் அகற்றவேண்டும் என்று அரசுத்தலைவர் Abdel Fattah al-Sisi அவர்கள் கூறிவருவதை அனைவரும் உணர்ந்து பின்பற்றவேண்டும் என்று முதுபெரும் தந்தை, Sidrak அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

கடந்த ஞாயிறன்று, எகிப்தின் Tanta எனுமிடத்தில் புனித ஜார்ஜ் காப்டிக் ஆலயத்தில் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவரால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது.

அதே நாள், அலெக்சாந்திரியாவின் புனித மார்க் ஆலயத்தில் காப்டிக் திருத்தந்தை Tawadros அவர்கள் வழிபாட்டை நிகழ்த்திய நேரத்தில் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் அங்கிருந்ததை, காவல்துறையினர் கண்டுபிடித்து, அவரை வெளியேற்றும் வேளையில், கோவிலுக்கு வெளியே, அவர் தன் மீதிருந்த குண்டை வெடிக்கச் செய்ததால், அங்கு 18 பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.