2017-04-14 11:32:00

இத்தாலி பலியானோ சிறையில் காலடிகளைக் கழுவிய திருத்தந்தை


ஏப்.,14,2017. இப்புனித வியாழனன்று காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை உள்ளூர் நேரம் 3 மணிக்கு வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்டு, உரோம் நகரிலிருந்து ஏறத்தாழ 45 மைல் தொலைவிலிருக்கும், பலஸ்திரினா மறைமாவட்டத்தின் பலியானோ எனுமிடத்திலுள்ள தடுப்புக்காவல் மையத்திற்கு உள்ளூர் நேரம் மாலை 4.15 மணிக்குச் சென்றார்.

அங்குள்ள சிறைக் கைதிகளுடன் இயேசுவின் இறுதி இரவு உணவு திருப்பலியை நிறைவேற்றுவதே திருத்தந்தையின் திட்டம். கடந்த ஆண்டுகளிலும் வத்திக்கானுக்கு வெளியே உள்ள பல்வேறு மையங்களில் புனித வியாழன் இரவுணவு திருப்பலியை நிறைவேற்றியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 2013ம் ஆண்டு, தான் திருத்தந்தையாக பதவியேற்ற  ஒன்பது நாட்களிலேயே சிறப்பித்த புனித வியாழன் திருப்பலியையும் உரோம் நகரின் இளையோர் சீர்திருத்தப்பள்ளியிலேயே நிறைவேற்றி, அங்குள்ள இளங்குற்றவாளிகள் 12 பேரின் காலடிகளைக் கழுவினார், திருத்தந்தை. 2014ம் ஆண்டு, நோயுற்றோர் மற்றும்  முதியோரை பாராமரிக்கும் ஓர் இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை, அங்குள்ளோருடன் காலடிகளைக் கழுவும் சடங்கை நிறைவேற்றினார். 2015ம் ஆண்டு, உரோம் நகரின் ரெபிபியா சிறைக்கைதிகளுடனும், கடந்த‌ ஆண்டு, Castelnuovo di Porto எனுமிடத்தில் தங்கியுள்ள புலம்பெயர்ந்தோருடனும், இச்சடங்கு நிறைவேற்றப்பட்டது. இவ்வாண்டு, ஏறத்தாழ 70 சிறைக்கைதிகள் வாழும் பலியானோ சிறைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 3 பெண் கைதிகள், ஓர் இஸ்லாமியர், ஓர் அர்ஜென்டீனா நாட்டவர், ஓர் அல்பேனியர் உட்பட 12 சிறைக்கைதிகளின் காலடிகளைக் கழுவினார். இந்த 12 பேரில் இருவர், ஆயுள் தண்டனைப் பெற்றக் கைதிகளாவர். இங்குள்ள கைதிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரையொன்றும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.