2017-04-15 12:13:00

கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா செய்தி


ஏப்.15,2017. கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா செய்தியை வழங்குபவர், திரு இதயங்கள் துறவுசபையைச் சேர்ந்த அருள்பணி இராசா. இவர், உரோம் நகரிலுள்ள திரு இதயங்கள் சபை, தலைமை இல்லத்தில் பணிபுரிபவர், மற்றும், உரோமை தமிழ் சங்கத்தின் தலைவர்.

 

அது போர்க்களம்! படைவீரன் ஒருவன் படைத்தலைவன் முன் வந்து,  “போர் முனையில் என் நண்பன் இருக்கிறான். அவனை மீட்க நான் செல்ல வேண்டும்” என்று அனுமதி கேட்டானாம். அதற்கு படைத்தலைவன் “உனக்கு அனுமதி இல்லை. ஏன் என்றால் போர் தீவிரமாக இருக்கிறது. உன் நண்பன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. நீ அங்கு சென்றால் உன் உயிரும் போய்விடும். உன்னையும் நான் இழக்க தயாரில்லை.” என்றானாம்.

படைத்தலைவன் சொன்னதையும் மீறி, போர்முனை சென்றான்! ஒரு மணி நேரம் கழித்து, இறந்த தன் நண்பனை தோளில் தூக்கியபடியே பலத்த காயங்களோடு படைவீரன் வந்தான். அதைப் பார்த்த படைத்தலைவன், “நான் சொன்னதையும் கேளாமல் நீயும் அடிப்பட்டு, இறந்த உன் நண்பனை கொண்டு வரவா சென்றாய். இதனால் யாருக்கு என்ன பலன்?”  என்று கோபத்தோடு கேட்டானாம்.

அதற்கு அந்தப் படைவீரன், “நான் போர்முனைக்கு சென்றபொழுது, என் நண்பன் உயிரோடு இருந்தான். அவன் என்னை பார்த்து ‘நண்பா நீ வருவாய் என்று எனக்கு தெரியும்’” என்றானாம்!

அன்பு அச்சம் கொள்ளாது!

இறை இயேசுவில் பிரியமான வத்திக்கான் வானொலி நேயர்களான உங்களுக்கு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள் கூறுவதிலே மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!

கிறிஸ்து இயேசு உயிர்த்துவிட்டார்! அல்லேலுயா! முதலாம் கொரிந்தியருக்கு எழுதிய மடலில், புனித பவுல், “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?' (1 கொரிந்தியர் 15, 55) என்று முழக்கமிடுகிறார்! அதே ஆர்ப்பரிப்போடு நாமும் கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் நாள் இது!

வாழ்வில் சோதனைகள், வேதனைகள், போராட்டங்கள் தொடர் பயணமாய் நம்மோடு வருவதில்லை. நம் வாழ்வு அடிமைத்தனத்தோடு, பாவச் சூழலோடு முடிந்துவிடுவதில்லை மாறாக நமக்கு விடியல் உண்டு, உயிர்ப்பு உண்டு என்று கொண்டாடும் திருநாள் இது!

இயேசு சிலுவையிலே மன்றாடிய 22ம் திருப்பாடலைத் தியானிக்கும்போது, மரணம் நமது முடிவு அல்ல, விடியல் நமக்கு உண்டு என்பது தெளிவாகிறது!  இயேசுவின் உயிர்ப்பு பாதையில் திருப்பாடல் 22 நம்மை அழைத்து செல்லுகிறது. “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்ற இயேசுவின் கூக்குரலோடு ஆரம்பிக்கின்றது திருப்பாடல் 22!

வயிற்றுக்கு உணவுதர முடியவில்லையே என்ற விவசாயிகளின் தற்கொலை கூக்குரல்,  பெண் என்பதாலே அனுபவிக்க வேண்டிய துன்பத்தின் வேதனை குரல், தன்னில் உள்ள தலைவனை இனம்காண முடியாத தமிழனின் அழுகுரல்,  மத, சாதி வன்முறையால் நொறுக்குண்ட நெஞ்சங்கள் எழுப்பும் ஈனக்குரல், அனைத்தும், சிலுவையில் அறையுண்ட இயேசுவின் குரலில் இணைந்து எழுப்பப்படுகிறது! “தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.” (திருப்பாடல் 22, 16-18)

வேதனைகள் நம்மைச் சூழும்போதும், சோதனைகள் நம்மை நொறுக்கும்போதும் நாம் சிலுவையை உற்று நோக்குவோம்! சிலுவை, மரணத்தின், வெறுப்பின், அடிமைத்தனத்தின் உருவகம்! அந்த உருவகத்தை, வெற்றியின் சின்னமாக, அன்பின் வெளிப்பாடாக மாற்றிட, அந்தச் சிலுவையில் தொங்குகின்ற இயேசுவை உற்று நோக்குவோம்!

மரணத்தை வெற்றி கொண்ட, அன்பின் இதயத்தை திறந்த தேவனை நோக்குவோம்!

அப்படி சிலுவையை உற்று நோக்கும்போது, நம்மாலும் பாட முடியும். “நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.” (திருப்பாடல் 22, 19) இறைவனின்  அன்பில் நம் வேதனைகள், சோதனைகள் மறைந்துபோகும் என்பதை விட அந்த சோதனைகளை வென்றிட பலம் பெறுவோம்!

“இறைவார்த்தை உயிருள்ளது, வலிமை மிக்கது. இதயங்களில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். பயந்து, வீட்டோடு அடைப்பட்ட சீடர்கள் எவ்வாறு உயிர்த்த இயேசுவை போதித்தார்கள்? யூத தலைவர்கள் நம்மையும் சிலுவையில் அறைந்து விடுவார்கள் என்ற பயத்தை எப்படி அவர்கள் வென்றார்கள்? அதிகாலையில் அச்சம் தவிர்த்து கல்லறைக்கு வந்த பெண்களிடம் உயிர்த்த இயேசுவின் நற்செய்தி “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” (மத்தேயு 28,10)

அச்சம் கொள்ளும் மனம், அன்பின் பலத்தை உணர்வதில்லை. உயிர்த்த இயேசுவின் நற்செய்தி “அஞ்சாதீர்கள்,” அன்பின் பலத்தால் எத்தகைய சோதனைகளையும் வெல்ல முடியும். இதைத்தான், உயிர்ப்பு பெருவிழா, நமக்கு எடுத்துரைக்கிறது.

துன்பங்கள் வரும்போது, அதைக் கண்டு பயந்து நடுங்கத் தேவையில்லை. அடிமைத்தனம், அடக்குமுறை கண்டு மிரள தேவையில்லை. மாறாக, உண்மையான விடுதலை கிடைக்க, அதன் மூலகாரணங்களை கண்டு களைய வேண்டும்.  

உயிர்ப்பு பெருவிழா நமக்கு எடுத்துரைப்பது, இறைவன் எல்லாவற்றையும் புதிதாக்குகின்றார். நம்மை விடுதலையின் பாதையில் நடக்க செய்வார்.

ஏனெனில், உயிர்த்த இயேசு, நம்மை, ஒரே உறவாக (இறைவனின் அன்பு மக்களாக) மாற்றுகிறார். இறைவனை, உயிர்த்த இயேசுவை, நம்மில் உணர அன்பை பகிர்வோம்.

இந்த பாஸ்கா உணவை உண்ணும்போது, நம் அனைவரையும் தம் மக்களாக மாற்றிய தேவனின் அன்பை, நம்மோடு இருக்கின்ற ஏழை எளிவரோடு பகிர்வோம்.

“எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!” (திருப்பாடல் 22, 16) என்ற திருப்பாடலின் வார்த்தையை வாழ்வாக்குவோம். துயர்மிகு புலம்பலில் ஆரம்பித்து புகழ்ச்சிப் பாடலில், உயிர்த்த இயேசு ஆண்டவரை போற்றி முடிகிறது திருப்பாடல் 22!

“மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர்.”  (திருப்பாடல் 22, 29-31)

உயிர்த்த இயேசுவில் அன்பின் பலத்தை உணர்வோம்! மரண அச்சம் களைந்து அனைவரும் ஒரே மக்களாய் இணைந்து ஆர்ப்பரித்து பாடுவோம் இயேசு ஆண்டவர் உயிர்த்து விட்டார், அல்லேலுயா!

உயிர்த்த ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.