2017-04-16 15:47:00

கிறிஸ்துவின் உயிர்ப்பு திருவிழிப்பு திருவழிபாடு


ஏப்.16,2017. கிறிஸ்துவின் உயிர்ப்பு திருவிழிப்பு திருவழிபாட்டை ஏப்ரல் 15, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் இரவு 8.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயலத்தில் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்ட இத்திருவழிபாட்டில், முதலில் ஒளி வழிபாட்டில், புதுத்தீயை மந்திரித்தார் திருத்தந்தை. பின்னர், பாஸ்கா திரி ஏற்றி, அத்திரியுடன் பசிலிக்காவுக்குள் பவனியுடன் வந்தார் திருத்தந்தை. பின்னர், பாஸ்கா புகழுரை பாடப்பட்டது. பின்னர் இறைவார்த்தை வழிபாட்டோடு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இதில், திருத்தந்தை வழங்கிய மறையுரையில், எங்கெல்லாம் கல்லறையும், சாவும் உறுதியாக நிலைபெற்றுள்ளதோ, அங்கெல்லாம், ஆண்டவர் உயிர் வாழ்கிறார் என்ற செய்தியைப் பறைசாற்றச் செல்வோம். தங்கள் நம்பிக்கை, கனவு, மாண்பு அனைத்தையும் புதைத்துவிட்ட மனிதர்களில், கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழ விழைகிறார். இந்த நம்பிக்கை வழியில் நம்மை அழைத்துச் செல்லும் தூய ஆவியாருக்கு, நாம் அனுமதி தர மறுத்தால், நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்தப் புதிய உதயத்தால், வியப்புற்று மகிழ்வதற்கு நம்மையே கையளிப்போம். அவரது அன்பும், கனிவும் நம்மை வழிநடத்த அனுமதிப்போம் என்று உரைத்தார்.

 

 

இத்திருப்பலியின், திருமுழுக்கு வழிபாட்டில், இரண்டு இத்தாலியச் சிறார், சீனாவைச் சேர்ந்த Jiana Chiara            Xu, மலேசியாவைச் சேர்ந்த Wong Wee Vern, இன்னும். மால்ட்டா, அல்பேனியா, அமெரிக்க ஐக்கிய நாடு, செக் குடியரசு, இஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 பேருக்குத் திருமுழுக்கு அளித்து, உறுதிபூசுதல் அருளடையாளங்களையும் வழங்கினார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் நடைபெற்ற இத்திருவிழிப்பு வழிபாட்டின் இறுதியில் எல்லாருக்கும் தனது ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 16, இஞ்ஞாயிறன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தனது 90வது பிறந்த நாளைச் சிறப்பித்தார். திருத்தந்தை அவர்களை வாழ்த்தி அவருக்காகச் செபிப்போம். 2013ம் ஆண்டில் பாப்பிறை தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அகிலத் திருஅவையையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எளிமையும், தாழ்மையும் கொண்டவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருஅவையின் 600 வருட வரலாற்றில், பாப்பிறை தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முதல் திருத்தந்தை இவர். இவரின் 90வது பிறந்த நாள், இத்திங்களன்று எளிமையான முறையில் சிறப்பிக்கப்படுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, இத்தாலியின் அசிசி நகரில் கட்டப்பட்டுள்ள புதிய திருத்தலத்திற்குத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். இப்புதிய திருத்தலம், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் அடிச்சுவசுகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை திருஅவைக்கு நினைவுபடுத்துகின்றது. இப்புனிதர் உலகமயமானப் பொருள்களைக் களைந்துவிட்டு, நற்செய்தியின் விழுமியங்களை அணிந்துகொள்ள வேண்டுமென்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றார். நம்மையே களைந்து, ஏழைகளாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவையில் இருப்போருக்கு உதவி, ஏழைகளோடு வாழ்வதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.