2017-04-16 15:01:00

திருத்தந்தையின் 'ஊருக்கும் உலகுக்கும்' உயிர்ப்பு விழா செய்தி


ஏப்.,16,2017. ஏப்ரல் 16, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று, நண்பகல் 12 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய 'Urbi et Orbi' அதாவது, 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற உயிர்ப்பு விழா சிறப்புச் செய்தி:

அன்பு சகோதர, சகோதரிகளே, உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!

"இயேசு உயிர்த்துவிட்டார்; அவர் உரைத்ததுபோலவே உயிர்த்துவிட்டார்" என்று சீடர்கள் கூறிய அற்புதச் செய்தியை, திருஅவை, இன்று, உலகெங்கும் எதிரொலிக்கிறது.

அடிமைத்தனத்திலிருந்து எபிரேய மக்கள் விடுதலை பெற்றதைக் கொண்டாடும் பாஸ்கா திருவிழா, இந்நாளில் நிறைவைப் பெறுகிறது. தன்னுடைய உயிர்ப்பினால், கிறிஸ்து, நம்மை, பாவத்திலிருந்தும், சாவிலிருந்தும் விடுவித்து, நித்திய வாழ்வின் வழியைத் திறந்துள்ளார்.

பாவங்கள் ஆதிக்கம் செலுத்தும்போது, நாம் வழிதவறிச் செல்கிறோம். ஆனால், நல்லாயனான இறைவன், நம்மைத் தேடி வருகிறார். நம்மை விடுவிப்பதற்காக, சிலுவை மரணம் வரை தன்னையேத் தாழ்த்துகிறார்.

வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், உலகம் என்ற பாலை நிலத்தில் வழிதவறிச் செல்லும் சகோதர, சகோதரிகளை, உயிர்த்த ஆயன் தேடி வருகிறார். தீமையின் பாரத்தால் நசுக்கப்பட்டிருக்கும் நம்மை, தன் தோள்களில் சுமந்து செல்கிறார். சமுதாயத்தின் விளிம்பு, தனிமை ஆகிய சிக்கலான பாதைகளில் காணாமல் போனவர்களை, உயிர்த்த ஆயன், தேடிச் செல்கிறார். இறைவனோடு மீண்டும் நட்புறவு கொள்வதற்கு, ஆயன் அழைத்துச் செல்கிறார்.

மனிதத்தன்மையற்ற கடுமையானத் தொழில், மனித வர்த்தகம், ஒதுக்கப்படுதல், சுரண்டப்படுதல், தீயப் பழக்கங்களுக்கு அடிமையாதல் என்ற, பழைய, மற்றும், புதிய அடிமைத்தனங்களுக்கு உள்ளாகும் மக்களின் சுமைகளை, அவர் சுமந்து செல்கிறார். இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள்ளும், வெளி உலகிலும், தங்கள் மாசற்ற நிலையை இழந்து தவிக்கும் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் அனைவரின் சுமைகளையும் அவர் சுமந்து செல்கிறார்.

ஆயுதம் தாங்கிய மோதல்கள், அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள், பட்டினி, அடக்குமுறை அரசுகள் என்ற பல கொடுமைகளுக்கு உள்ளாகி, சொந்த நாட்டைவிட்டு வெளியேறும் மக்களுடன் உயிர்த்த ஆயன் துணையாகச் செல்கிறார்.

சிக்கல்கள் நிறைந்த இன்றைய உலகில், நீதிக்காக, அமைதிக்காக உழைப்போரை, உயிர்த்த இறைவன் வழி நடத்துவாராக! பரவிவரும் மோதல்களையும், பெருகிவரும் ஆயுத விற்பனையையும், அரசுத்தலைவர்கள், தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான மன உறுதியை, இறைவன் வழங்குவாராக!

குறிப்பாக, சிரியா நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்வோருக்கு, இறைவன் அருள் தருவாராக!

புனிதபூமி, ஈராக், ஏமன் உட்பட, மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளுக்கு அமைதி வழங்குவாராக!

பகைமை உணர்வுகளாலும், பட்டினியாலும் துன்புறும் ஆப்ரிக்காவிற்கு, குறிப்பாக, தென் சூடான், சூடான், சொமாலியா, காங்கோ குடியரசு ஆகிய நாட்டு மக்களுடன், நல்லாயன் நெருங்கியிருப்பாராக!

அரசியல், சமுதாய நெருக்கடிகளால் துன்புறும் இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு, நன்மைகள் புரிவோரின் முயற்சிகளை உயிர்த்த இயேசு தாங்கி நிற்பாராக! அங்கு நிலவும் ஊழல்களைக் களைய, உரையாடல் வழியே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக!

மோதல்களாலும், இரத்தம் சிந்துதலாலும் தொடர்ந்து துன்புறும் உக்ரைன் நாடு, மீண்டும் சமுதாய ஒருமைப்பாட்டைச் சுவைப்பதாக!

ஐரோப்பிய கண்டத்தின்மீது உயிர்த்த ஆண்டவர் தன் ஆசீரைப் பொழிவாராக! பல்வேறு சிக்கல்களை, குறிப்பாக, இளையோரிடையே நிலவும் வேலையில்லாக் குறையைத் தீர்த்து, நம்பிக்கை தருவாராக!

அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த ஆண்டு, உலகெங்கும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும், உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் இணைந்து: "ஆண்டவர் உரைத்ததுபோலவே, உயிர்த்துவிட்டார்" என்ற செய்தியை ஒரே குரலில் உலகெங்கும் அறிக்கையிடுகிறோம். பாவம், மரணம் என்ற இருளை ஒழித்த இயேசு, நாம் வாழும் காலத்தில் அமைதியை அளிப்பாராக!

அனைவருக்கும், உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.