2017-04-18 14:13:00

அசிசி நகர் புதிய திருத்தலத்திற்கு திருத்தந்தை வாழ்த்து


ஏப்.18,2017. “நற்செய்தியில், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பற்றிப் பேசும் பகுதிகளில் ஒன்றை, ஒவ்வொரு நாளும் இந்த உயிர்ப்பு வாரத்தில் வாசிப்பது நமக்கு நன்மை பயக்கும்” என்ற வார்த்தைகள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்காக, தன் ஆடைகள் உட்பட, எல்லாவற்றையும் துறந்ததன் நினைவாக திருத்தலம் ஒன்று எழுப்பப்படுவதற்கு, தனது நன்றியையும் ஆதரவையும் தெரிவித்து, நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அசிசி பேராயர் Domenico Sorrentino அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், பிறரின் நலனுக்காக அனைத்தையும் துறந்த புனித பிரான்சிஸ் அவர்களின் மனநிலையைப் பின்பற்றி, கத்தோலிக்கத் திருஅவையும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவைப் பின்செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நற்செய்தி அறிவிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் மற்றும், புனித பிரான்சிசின் சாட்சிய வாழ்வின் எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னும், உலகளாவிய சமத்துவமற்ற பொருளாதார நிலையை நாம் எதிர்கொள்கிறோம் எனவும், இப்புதிய திருத்தலம், பணத்தின்மீது பற்றறுத்து வாழ்வதற்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

அசிசி நகரில் அமைக்கப்படும் இப்புதிய திருத்தலம், வருகிற மே 20ம் தேதி அருள்பொழிவு செய்யப்படவிருக்கின்றது. இதிலுள்ள, புனித பிரான்சிஸ் ஆடைகளைக் களைந்த அறையும் பொது மக்களுக்குத் திறந்து விடப்படும்.

இந்த அறை, புனித பிரான்சிஸ், கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு முன்னர், தன் தந்தை மற்றும் அசிசி ஆயர் முன்னிலையில் ஆடைகளைக் களைந்து, தன் சொத்துக்களைத் துறந்த இடமாகும். இது, அசிசி ஆயர் இல்லத்தில் உள்ளது.

2013ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகருக்குச் சென்றபோது, இந்த அறையிலே, உள்ளூர் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின் உறுப்பினர்களையும், குடும்பங்களையும் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.