2017-04-18 14:45:00

அணு சக்திக்கு எதிரான முயற்சிக்கு கொரியக் கத்தோலிக்கர் ஆதரவு


ஏப்.18,2017. அணு சக்தி இல்லாத ஒரு நாடாக தென் கொரியாவை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை தனது ஆதரவை வழங்கியுள்ளது.

தென் கொரியாவில் அணு சக்தி நிலையங்களை முழுவதுமாக அகற்றுவதற்கு, அணு சக்திக்கு எதிரான கத்தோலிக்க ஒருமைப்பாடு என்ற இயக்கம், எடுத்துவரும் முயற்சிகளுக்கு, அந்நாட்டு ஆயர்கள், கடந்த வாரத்தில், தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அணு சக்தி நிலையங்களுக்கு எதிராக, பத்து இலட்சம் கையெழுத்துக்களை சேகரித்து, அவற்றை, அரசுத்தலைவர் வேட்பாளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு, இந்த இயக்கம் திட்டமிட்டு வருகிறது.

தென்கொரியாவின் ஆயர் பேரவை, மறைமாவட்டங்களின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுக்கள், துறவு நிறுவனங்கள் மற்றும், ஏனைய திருஅவை நிறுவனங்கள் இந்த நடவடிக்கையில் இணைவதாக அறிவித்துள்ளன.

தென் கொரியாவில், அணு சக்தி நிலையங்களை முழுவதுமாக அகற்றுவதற்கென, 2016ம் ஆண்டு செப்டம்பரில், இந்த இயக்கம் முதன் முதலாக, நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

தென் கொரியாவில், வருகிற மே 9ம் தேதி அரசுத்தலவைர் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.