2017-04-20 15:39:00

பாத்திமா திருத்தலத்தில் மே 13ம் தேதி புனிதர் பட்ட விழா


ஏப்.20,2017. பாத்திமா நகரில் அன்னை மரியா தோன்றியதன் முதல் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க, அங்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 13ம் தேதி, இடையர்களான பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜெசிந்தா மார்த்தோ என்ற இருவரையும், அத்திருத்தலத்தில் புனிதர்களாக உயர்த்துவார்.

ஏப்ரல் 20, இவ்வியாழன் காலை வத்திக்கானில் நடைபெற்ற கர்தினால்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் இறுதியில், திருத்தந்தை இத்தகவலை வெளியிட்டார்.

இடையர்களான பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா இருவரின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை, மார்ச் மாதம் 23ம் தேதி, திருத்தந்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, இந்த நூற்றாண்டு விழா, புனிதர் பட்ட விழாவாகவும் உருவெடுத்துள்ளது.

10 வயது நிறைந்த பிரான்சிஸ்கோவும், 9 வயது நிறைந்த ஜசிந்தாவும் புனிதர்களாக உயர்த்தப்படும்போது, கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரைத் துறந்த குழந்தை மறைசாட்சிகள் அல்லாமல், திருஅவையில், மிகக் குறைந்த வயதில் புனிதர் பட்டம் பெற்றவர்கள் என்ற பெருமையை இவர்கள் இருவரும் பெறுவர்.

இவ்விருவரையும், 2000ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால், அருளாளர்களாக உயர்த்தினார்.

மேலும், மறைசாட்சிகளாக உயிர் துறந்த அருளாளர்களான, அருள்பணியாளர்கள் Andrea de Soveral, Ambrose Francesco Ferro, பொதுநிலையினரான Matteo Moreira மற்றும் 27 தோழர்களும், இறை ஆயனின் புதல்வியர் சபையை நிறுவிய அருள்பணியாளர் Faustino Míguez, கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் Angelo da Acri என்ற இரு அருளாளர்களும், அக்டோபர் 15, ஞாயிறன்று, புனிதர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.