2017-04-20 16:39:00

மன்னார் ஆயர், இலங்கைத் தமிழர்கள் சார்பில் அரசிடம் விண்ணப்பம்


ஏப்.20,2017. இலங்கையின் மன்னார் பகுதியில், தமிழர்களுக்குச் சொந்தமான இடங்கள் அவர்களுக்கு மீண்டும் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை, மன்னார் ஆயர், ஜோசப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்கள், அரசு அதிகாரிகளிடம் ஏப்ரல் 19, இப்புதனன்று ஒப்படைத்தார்.

மன்னார் பகுதியில் வாழும் 500க்கும் அதிகமான குடும்பங்கள், மார்ச் 23ம் தேதி துவங்கி, புனித வாரம் முடிய, திறந்த வெளியில் கூடாரங்கள் அமைத்து, தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்தனர் என்று, UCAN செய்தி கூறுகிறது.

இந்த போராட்டத்தின் ஓர் உச்சகட்ட நிகழ்வாக, மன்னார் பகுதியில் பணியாற்றும் 40 அருள் பணியாளர்கள், 300க்கும் அதிகமான பொதுநிலையினர் ஆகியோருடன், மன்னார் ஆயர் சுவாமிப்பிள்ளை அவர்கள், புனித செபாஸ்டின் கோவிலிலிருந்து முள்ளிக்குளம் வரை ஊர்வலமாகச் சென்று, அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பத்தை கையளித்தார் என்று UCAN செய்தி மேலும் கூறுகிறது.

இலங்கை உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தபின், முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பால், பல நூறு தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.