சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ சுற்றுச்சூழல்

இலங்கையில் கழிவகற்றும் பணி அத்தியாவசிய சேவையாகிறது

கொழும்புவில் குப்பைமேடு - RV

21/04/2017 16:20

ஏப்.21,2017. இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி அவைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி, அத்தியாவசிய சேவையாக இருக்குமென, அந்நாட்டு குடியரசுத் தலைவர், மைத்திரிபால சிறிசேன அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 20, வியாழன் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு அரசாணை அறிவிப்பை, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது பிரிவின் கீழ், அரசுத்தலைவர் சிறிசேன அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வீதிக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் அல்லது வேறு பொருட்களை அப்புறப்படுத்துதல், சேகரித்தல், கொண்டு செல்லுதல், தற்காலிகமாக சேமித்து வைத்தல், பதப்படுத்தல், தனித்தனியாக வேறுபடுத்தி பிரித்தல் மற்றும் தொற்று நீக்குதல் போன்ற பணிகள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.

அரசுத்தலைவர் சிறிசேன அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ''இப்பணிகளில் ஈடுபட்டுள்ள நபர் அல்லது உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், அச்சுறுத்தல் விடுத்தல், இடையூறு ஏற்படுத்தல் போன்றவை குற்றமாக கருதப்படும்" என கூறப்பட்டுள்ளது.

கொலன்னாவ மீதொட்டுமூல்ல குப்பைமேடு சரிந்த விபத்தின் பின்னர், கொழும்பு மாநகராட்சி எல்லைக்குள், கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே, கழிவுகளை அகற்றுதல் சேவையை, அத்தியாவசிய சேவையாக கருதும் இந்த சிறப்பு அரசாணை அறிவிப்பு வெளியாகியுள்ளது என, பிபிசி ஊடகம் கூறியுள்ளது.

ஆதாரம் : ColomboPage / பிபிசி / வத்திக்கான் வானொலி

21/04/2017 16:20