சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

மத்தியக் கிழக்கு பகுதியில் மிகக் கொடுமையான நிகழ்வுகள்

பழைய எருசலேமில், அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்கள் - AFP

21/04/2017 16:04

ஏப்.21,2017. அண்மைய நாள்களில், மத்தியக் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்துள்ள மிகக் கொடுமையான நிகழ்வுகள், மனிதாபிமானமற்ற நிலையை இன்னும் கேவலமாக உலகிற்குக் காட்டியுள்ளது என்று, ஐ.நா.பாதுகாப்பு அவையில், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இவ்வியாழனன்று உரையாற்றினார்.

ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், சிரியா நாட்டில் பயன்படுத்தப்பட்ட வேதியல் தளவாடங்கள், எகிப்து நாட்டில் வழிபாட்டு நேரத்தில் நிகழ்ந்த தாக்குதல்கள், போரின் கொடுமையிலிருந்து தப்பித்துச் செல்வோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் கொடுமைகளால் புலம் பெயர்ந்து செல்வோரை, லெபனான் நாடு இலட்சக்கணக்கில் வரவேற்று புகலிடம் தருவதை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், அந்நாட்டிற்கு, உலக சமுதாயம் அனைத்து உதவிகளையும் செய்வது கடமை என்றும் எடுத்துரைத்தார்.

புலம் பெயர்ந்தோருக்குப் புகலிடம் தரும் அரசுகளுக்கு உதவுவதற்குப் பதிலாக, போரிடும் குழுக்களுக்கு ஆயுத உதவிகள் செய்யும் வெளிநாட்டு அமைப்புக்களே பெருகி வருகின்றன என்பதை, பேராயர் அவுசா அவர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நிலவிவரும் மோதல்கள் குறித்து தன் உரையில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இஸ்ரேல், பாலஸ்தீனா இரண்டும், இருவேறு தனிப்பட்ட நாடுகளாக இருப்பதையே, திருப்பீடம் 1947ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

21/04/2017 16:04