2017-04-21 14:52:00

பாசமுள்ள பார்வையில்.. குறிப்பறிந்து செயல்படுபவர் தாய்


அந்தச் சோளக் காட்டிலிருந்த மரம் ஒன்றில், குருவி ஒன்று கூடு கட்டி, குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது. கதிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. அச்சமயத்தில், ஒரு நாள் தாய்க் குருவி இரைதேடச் செல்வதற்குமுன், தன் குஞ்சுகளிடம் இவ்வாறு கூறியது. அறுவடை காலம் நெருங்கிவிட்டது. அதனால், நம் வீட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், நில உரிமையாளர் வந்தால், அவர் என்ன பேசுகிறார் என்பதை கவனித்து வையுங்கள் எனச் சொல்லிச் சென்றது. அன்று அந்தச் சோளக் காட்டிற்கு, தன் மகனோடு வந்தார் நில உரிமையாளர். அவர் தன் மகனிடம், நாளை நம் உறவினர்களுடன் வந்து சோளக் கதிர்களை அறுக்கலாம் எனக் கூறினார். அன்று மாலை கூட்டிற்குத் திரும்பிய தாயிடம், குஞ்சுகள் தாங்கள் கேட்டதைக் கூறின. சரி, இப்போது நாம் இடம் மாறத் தேவையில்லை எனச் சொல்லியது தாய். மறுநாளும், தாய்க் குருவி உணவு தேடச் செல்வதற்கு முன், முந்திய நாள் கூறியதையே குஞ்சுகளிடம் சொல்லிச் சென்றது. அன்று வீடு திரும்பிய தாயிடம், அம்மா, அந்த  நில உரிமையாளர் இன்றும் வந்தார், அவர் தன் மகனிடம், நாளை, நம் வீட்டுப் பக்கத்தில் இருப்பவர்களுடன் வந்து அறுவடை செய்வோம் எனத் சொன்னார் என்றன குஞ்சுகள். அப்படியா, இப்போதும் நாம் வேறிடம் போகத் தேவையில்லை எனச் சொல்லியது தாய்க் குருவி. அதற்கு அடுத்த நாளும் முந்தைய நாளில் சொன்னதையே சொல்லி, இரை தேடச் சென்றது தாய்க் குருவி. அன்று மாலையில் குஞ்சுகள், தங்கள் தாயிடம் இவ்வாறு கூறின. அம்மா, நாளை நாமே வந்து அறுவடை செய்யலாம் என, நில உரிமையாளர், தன் மகனிடம் கூறியதைக் கேட்டோம் என்றன. ஓ! அப்படியா கதை, தங்கள் வேலையை தாங்களே செய்ய முடிவெடுத்து விட்டனரா, நாம் இன்றே நம் வீட்டின் இடத்தை மாற்ற வேண்டும் என்றது தாய்க் குருவி.

தம் பிள்ளைகளைக் காப்பாற்ற குறிப்பறிந்து செயல்படுபவர் தாய்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.