2017-04-21 15:20:00

'புதிய மறைசாட்சிகளின்' வழிபாட்டை நடத்தும் திருத்தந்தை


ஏப்.21,2017. ஏப்ரல் 22, இச்சனிக்கிழமை மாலை 5 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள புனித பர்த்தலமேயு பசிலிக்காவில், Sant'Egidio குழுமத்துடன் திருவிழிப்பு வழிபாட்டை மேற்கொள்கிறார்.

20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவுக்காக உயிர் துறந்த 'புதிய மறைசாட்சிகளின்' நினைவிடமாகக் கருதப்படும் இந்த பசிலிக்காவில், திருத்தந்தையர் 2ம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரும் வழிபாடுகளை முன்னின்று நடத்தியுள்ளனர்.

இந்த வழிபாட்டு நிகழ்வுக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த பசிலிக்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் பல மறைசாட்சிகளின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ள ஆறு பீடங்களுக்குச் சென்று, தன் வணக்கத்தைச் செலுத்துகிறார்.

கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அருள்பணி Jacques Hamel அவர்களின் சகோதரி, Roselyne Hamel, 2009ம் ஆண்டு, எல் சால்வதோர் நாட்டில் வன்முறை கும்பல்களின் பிடியிலிருந்து இளையோரைக் காக்க போராடி, அக்கும்பலைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்ட William Quijano என்ற இளைஞனின் நண்பர் Francisco Hernandez, நாத்சி கொள்கைகளை எதிர்த்ததால் 1939ம் ஆண்டு கொல்லப்பட்ட எவாஞ்சலிக்கல் போதகர் Paul Schneider அவர்களின் மகன் Karl Schneider ஆகியோர், இந்த வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர் என்று Sant’Egidio குழுமம் அறிவித்துள்ளது.

வழிபாட்டிற்குப் பின், Sant'Egidio குழுமத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் புலம்பெயர்ந்தோரையும், மனித வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது விடுக்கப்பட்டுள்ள பெண்களையும் திருத்தந்தை சந்திக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.