2017-04-22 15:19:00

இறை இரக்கத்தின் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


இரக்கத்தின் வடிவே இறைவன் என்பதை, எல்லா மதங்களும் ஆணித்தரமாகச் சொல்கின்றன. இரக்கமே உருவான இறைவனைக் கொண்டாட திருஅவை நம்மை இன்று அழைக்கிறது… உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை, வழிபாட்டு காலத்தின் ஒரு பகுதியாக 2000மாம் ஆண்டில் இணைத்தவர், திருத்தந்தை 2ம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய இரவு, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இறைவனின் இரக்கத்தில் இரண்டறக் கலந்தார். 2011ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், முத்திப்பேறு பெற்றவராகவும், 2014ம் ஆண்டு, அதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனிதராகவும் உயர்த்தப்பட்டார்.

திருத்தந்தையர், 2ம் ஜான்பால் அவர்களையும், 23ம் ஜான் அவர்களையும் புனிதர்களாக உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏன் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'த் தேர்ந்தெடுத்தார் என்று, செய்தியாளர்கள், அவரிடம் கேட்டபோது, அவர், "இவ்வுலகம் என்றுமில்லாத அளவுக்கு இரக்கத்தை இழந்து தவிக்கிறது. எனவே, நாம் வாழும் உலகிற்கு 'இரக்கத்தின் காலம்' (the age of mercy) மிக அதிகமாகத் தேவைப்படுகிறது" என்று பதில் சொன்னார்.

இவ்வுலகம் என்றுமில்லாத அளவு இரக்கத்தை இழந்து தவிக்கிறது என்பதை நம் உள்ளங்களில் ஆணி கொண்டு அறைந்துள்ளது, அண்மையில் நாம் கடந்து வந்த புனித வாரம். ஏப்ரல் 9, புனித வாரத்தின் முதல் நாளான குருத்து ஞாயிறன்று, எகிப்து நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவில்கள் இரண்டில், வழிபாட்டு நேரத்தில், தற்கொலை குண்டுதாரிகள் இருவர், தங்கள் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததால், 47 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேலானோர் காயமுற்றனர். புனித வாரத்தின் இறுதி நாள், சனிக்கிழமை, சிரியா நாட்டில், போரின் கொடுமையிலிருந்து தப்பித்துச் செல்வோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 126 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில், 70க்கும் அதிகமானோர், குழந்தைகள்.

கடந்த ஆண்டு, (2016) உலகெங்கும் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடப்பட்டபோது, பாகிஸ்தான், இலாகூர் நகர் பூங்காவில், நிகழ்ந்த தற்கொலை குண்டுவெடிப்பில், 75 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாண்டு, அத்தகைய முயற்சியை இலாகூர் பேராலயத்தில் ஓருவர் மேற்கொள்ளச் செல்லும் வழியில், காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றதால், அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கப்படவில்லை.

அர்த்தம் எதுவுமே இல்லாமல், வன்முறைகள் நிகழும்போது, நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தரப்படும் வழிகள், மன்னிப்பு, மற்றும் செபம். இவ்விரண்டையும் இணைத்து, இயேசு கல்வாரியில் சொன்ன வார்த்தைகள், அடிக்கடி நமக்கு நினைவுறுத்தப்படுகின்றன. "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34) இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடும்போது, கல்வாரியில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு, தன் கொலைகாரர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டிய சொற்களை, இந்த ஞாயிறு வழிபாட்டின்போது புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இருவேறு மடல்கள் உதவியாக இருக்கும். முதல் மடல், கடந்த பல மாதங்களாக, சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மடல். 2015ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, பாரிஸ் மாநகரிலும், புறநகர்ப் பகுதியிலும் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தன் இளம் மனைவியை இழந்த ஒருவர், தீவிரவாதிகளுக்கு எழுதியுள்ள திறந்த மடல் இது:

"வெள்ளிக்கிழமை மாலை, ஓர் அற்புத உயிரை நீங்கள் திருடிக் கொண்டீர்கள். அவர்தான் என் அன்பு மனைவி, என் மகனின் தாய். ஆனாலும், என் வெறுப்பை உங்களால் பெறமுடியாது. நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை; நீங்கள் எல்லாருமே இறந்த ஆன்மாக்கள்.

கடவுளுக்காகக் கண்மூடித்தனமாக நீங்கள் கொல்கிறீர்களே; அந்தக் கடவுளின் சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றால், என் மனைவியின் உடலைத்  துளைத்த உங்கள் ஒவ்வொரு குண்டும், அந்தக் கடவுளின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருக்கும்.

முடியாது. என் வெறுப்பைப் பெறும் திருப்தியை உங்களுக்கு நான் தரமுடியாது. அதைத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்! வெறுப்புக்கு, கோபத்தால் நான் விடையளித்தால், உங்களை ஆட்டிப்படைக்கும் அறியாமைக்கு நானும் அடிமையாகிவிடுவேன்.

நான் பயத்தில் வாழவேண்டும், எனக்கு அருகிலிருப்போர் அனைவரையும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்காது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள். என் பாதுகாப்பிற்காக, என் உள்மனச் சுதந்திரத்தை, பலிகொடுக்க மாட்டேன்.

இப்போது இருப்பது, நாங்கள் இருவர் மட்டுமே, நானும், என் மகனும். ஆனால், உலகின் இராணுவங்களை விட, நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள். என் செல்ல மகன், வாழப்போகும் ஒவ்வோரு நாளும், தன் மகிழ்வாலும், சுதந்திரத்தாலும் உங்களை அவன் அவமானப் படுத்திக்கொண்டே இருப்பான்."

Helene Muyal என்ற தன் இளம் மனைவியை இழந்த, Antoine Leiris என்ற பத்திரிகையாளர், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட திறந்த மடல் இது. தெளிவான, துணிவான, உணர்வுகளை வெளியிடும் இம்மடல், வெறுப்புக்குப் பணியமாட்டேன் என்ற உன்னத உண்மையைச் சொல்கிறது. அதேவேளை, இரக்கம் என்ற உண்மைக்குள் இன்னும் ஆழமாகச் செல்லாமல் எழுதப்பட்ட மடலோ என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இத்தகைய மடலை வாசிக்கும் வன்முறையாளர்களின் வெறுப்பு இன்னும் கூடுமோ என்று அச்சமும் எழுகின்றது.

இதிலிருந்து மாறுபட்ட மற்றொரு மடல், ஒரு துறவியால் எழுதப்பட்டது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட Christian de Chergé என்ற ஒரு துறவி, தன் மரணத்திற்கு முன் எழுதிய ஒரு மடலைச் சிந்தித்துப் பார்க்கலாம். Cistercian துறவுச் சபையைச் சேர்ந்த அருள்பணி Christian அவர்கள், அல்ஜீரியா நாட்டில் பணியாற்றியபோது, இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டார். அல்ஜீரியாவில் பணியாற்றுவதற்கென, இவர், இஸ்லாமிய மதத்தையும், குர்ஆனையும் ஆழமாகப் படித்துத் தேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர்.

தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்தபோது, அருள்பணி Christian அவர்கள், எழுதிய ஒரு மடல், உலகில் நிலவும் வன்முறைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றிற்கு நம் பதிலிறுப்பு எவ்விதம் அமையவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். இதோ, அருள்பணி Christian அவர்கள், எழுதிவைத்த இறுதி சாசனம்:

"எந்நேரமும் எனக்கு மரணம் வரலாம் - இன்று, இப்போது அது வரலாம். தீவிரவாதத்தின் பலிகடாவாக நான் மாறும்போது, என் துறவுக் குடும்பம், என் உறவினர் அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். என் வாழ்வு, இறைவனுக்கும், இந்நாட்டுக்கும் முற்றிலும் வழங்கப்பட்டது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். என்னைப் போலவே, கொடூரமான மரணங்களைச் சந்தித்து, மறக்கப்பட்ட பலரை நினைவில் கொள்ளுங்கள்.

என் மரணம் நெருங்கிவரும் வேளையில், என்னை மன்னிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவேண்டும். அதேவண்ணம், என்னைக் கொல்பவர்களுக்கு மன்னிப்பு வேண்டவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும். என் கொலைக்குக் காரணம் இவர்களே என்று, கண்மூடித்தனமாக, இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டால், அது என்னை மகிழ்விக்காது. பொதுப்படையாக எழும் இவ்விதக் குற்றச்சாட்டுகளால், அல்ஜீரிய மக்களையும், இஸ்லாமியரையும் சந்தேகத்தோடு, மரியாதையின்றி பார்க்கக்கூடிய சூழல் உருவாகும்.

இறைவன் விரும்பினால், என் இறுதி நேரத்தில் நான் செய்ய விழைவது இதுதான். தந்தையாம் இறைவன், இஸ்லாமியர் அனைவரையும், தன் அன்புக் குழந்தைகளாகப் பார்ப்பதுபோல், நானும் அவர்களைப் பார்க்கும் வரம் வேண்டுகிறேன். என் இறுதி நேரத்தை நிர்ணயிக்கும் அந்த ஒருவருக்கு நான் நன்றி சொல்கிறேன். இறைவனின் சாயலை உம்மில் காண்கிறேன். இறைவனுக்கு விருப்பமானால், நாம் இருவரும், 'நல்ல கள்வர்களைப்' போல், விண்ணகத்தில் சந்திப்போம். ஆமென்."

அருள்பணி Christian அவர்கள் எழுதியுள்ள இம்மடல், காயங்களைத் திறப்பதற்குப் பதில், அந்தக் காயங்களிலேயே மீட்பைக் காண்பதற்கு அழைப்பு விடுக்கிறது. இதுதான், அன்று, இயேசுவுக்கும் தோமாவுக்கும் இடையே நிகழ்ந்தது. கல்வாரியில் காயப்பட்டது போதாதென்று, சீடர்களின் சந்தேகத்தாலும், நம்பிக்கையிழந்த நிலையாலும், இயேசு, மீண்டும் காயப்படுகிறார். இருப்பினும், அந்தக் காயங்களைத் தொடுவதற்கு தன் சீடர்களையும், நம்மையும் அழைக்கிறார். காயங்களைத் தொடுவது, மீண்டும் வலியை உருவாக்கும். ஆனால், அன்புடன், நம்பிக்கையுடன் தொடும்போது, காயங்கள் குணமாவதற்கும் வழி பிறக்கும். இதுதான், அன்று, இயேசுவுக்கும் தோமாவுக்கும் இடையே நிகழ்ந்தது.

தன் காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, தோமா, இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால், தோமா, இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே, தோமாவின் மனதை, இயேசு, மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை, தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28)

இயேசுவை, ‘கடவுள்’ என்று அறிக்கையிட்ட முதல் மனிதப்பிறவி, தோமாதான். இவ்விதம் ஆழமாய்த் தொட்டு, தன்னை மீட்புக்கு அழைத்துச்சென்ற இயேசு கிறிஸ்துவை, உலகெங்கும், குறிப்பாக, இந்தியாவில் அறிமுகம் செய்தவர், திருத்தூதர், தோமா.

இறைவனின் இரக்கம், சந்தேகப் புயல்களை அடக்கும்;  சந்தேக மலைகளைத் தகர்க்கும்; சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். உயிர்த்த இறைவனைத் தொட்டுணர அழைக்கும். இந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, ‘சந்தேகத் தோமா’ என்றழைக்கப்படும் புனித தோமையாரின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.