2017-04-22 16:18:00

திருத்தந்தை, Liechtenstein அரச குடும்பத்தினர் சந்திப்பு


ஏப்.22,2017. இச்சனிக்கிழமையன்று, Liechtenstein இளவரசர், 2ம் Hans-Adam, இளவரசி Marie del, வாரிசு இளவரசர் Alois, இளவரசி Sophie ஆகியோரை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் நேரடி பொதுச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகியோரையும், இந்த அரச குடும்பத்தினர் சந்தித்தனர்.

திருப்பீடத்திற்கும், Liechtenstein நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அப்பகுதியில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி, அந்நாட்டில், திருஅவை தொடர்ந்து ஆற்றிவரும் பணிகள் ஆகியவை, இச்சந்திப்புக்களின் உரையாடல்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

Liechtenstein அரசு, பன்னாட்டு விவகாரங்களில், குறிப்பாக, மனித உரிமைகளைக் காப்பதில் எடுத்துவரும் முயற்சிகளை, திருப்பீடத் தலைவர்கள் பாராட்டினர் என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது. 

Liechtenstein என்பது, மத்திய ஐரோப்பாவிலுள்ள முடியாட்சி நாடாகும். ஆல்ப்ஸ் மலைப்பகுதி நாடாகிய இதற்கு, மேற்கிலும், தெற்கிலும் சுவிட்சர்லாந்தும், கிழக்கிலும், மேற்கிலும் ஆஸ்ட்ரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. 160 சதுர கிலோ மீட்டருக்கு சற்று அதிகமான நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்நாட்டில், 37 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். Liechtenstein நாடு, உலகில், உள்நாட்டு உற்பத்தியை அதிகமாகக் கொண்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றாகும்.  இங்கு ஜெர்மன் மொழி பேசப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.