2017-04-22 16:30:00

துன்புறும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாடு அவசியம்


ஏப்.22,2017. உலக அளவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான சமய அடக்குமுறை அதிகரித்துவரும்வேளை, கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு காட்ட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என, அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெறும் கிறிஸ்தவர்களுக்கெதிரான அடக்குமுறை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக, இவ்வெள்ளியன்று வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய, வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald W. Wuerl அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள், துன்புறும் இலட்சக்கணக்கான மக்கள் சார்பில் தங்களின் குரல்களை எழுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் Wuerl.

துன்புறும் இலட்சக்கணக்கான மக்களுக்காகச் செபிக்குமாறும் கூறியுள்ள கர்தினால் Wuerl அவர்கள், உலகளாவிய காரித்தாஸ் போன்ற அரசு-சாரா நிறுவனங்கள் இம்மக்கள் மத்தியில் ஆற்றிவரும் சேவைகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.