2017-04-24 16:41:00

புனித பர்த்தலமேயு பசிலிக்காவில் திருத்தந்தையின் மறையுரை


ஏப்.24,2017. நம் காலத்து மறைசாட்சிகள், இன்றைய திருஅவையின் உயிர்த்துடிப்புள்ள இரத்தம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை மாலை வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

20 மற்றும் 21ம் நூற்றாண்டில் தங்கள் மத நம்பிக்கைக்காக உயிர் துறந்த கிறிஸ்தவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வண்ணம், ஏப்ரல் 22 இச்சனிக்கிழமை மாலை, உரோம் நகரில் அமைந்துள்ள புனித பர்த்தலமேயு பசிலிக்காவில் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை வழிபாட்டை மேற்கொண்டார்.

இந்த வழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய மறையுரையில், இவ்வுலகப் போக்கிற்கு எதிராகச் செல்லும் கிறிஸ்தவின் விழுமியங்களைக் கடைப்பிடிப்போர், இவ்வுலகினரால் வெறுக்கப்பட்டு, கொல்லப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இவ்வுலகின் தவறான கொள்கைகளுக்கு எதிர் சாட்சிகளாக ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மேற்கொள்ளும் சாட்சிய வாழ்வே இன்றைய திருஅவையில் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து வன்முறைகளிலும், வெறுப்பு ஒன்றே அடித்தளமாக அமைந்துள்ளது என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வுலகை ஆட்சி செய்யும் இந்த வெறுப்புணர்வை, இயேசுவின் பாடுகளும், உயிர்ப்பும் வென்றுள்ளது என்பதை நாம் நம்புகிறோம் என்று கூறினார்.

தங்கள் மத நம்பிக்கையால், சொந்த நாடுகளை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர் அனைத்து சுகங்களையும் இழந்து, கடினமான வாழ்வை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இவர்களில் நாம் இன்றைய மறைசாட்சிகளைக் காண்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.