2017-04-24 14:36:00

வாரம் ஓர் அலசல் – பண ஆசை, பதவி ஆசை


ஏப்.24,2017. இளையோர்தான் இந்த உலகின் மாபெரும் சக்தி. நம்முடைய இளையோரின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால், இந்தியா, நிச்சயம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடும்   என்று உறுதிபடச் சொன்னவர் கனவு நாயகன் A.P.J அப்துல்கலாம். நாட்டில், இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க, விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும். விவசாய விஞ்ஞானிகள், விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும், தொழிற்சாலைகளும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நமது விவசாயப் பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு நான்கு விழுக்காடு அதிகரிக்க முடியும் என்றும் சொன்னவர் அப்துல் கலாம் அவர்கள். ஆனால், நாட்டில் விவசாயப் பெருமக்கள் எதிர்நோக்கும் துன்பங்களைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. தேசிய வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி, தமிழகத்தில் கூடுதல் வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக டில்லி ஜந்தர்மந்தரில், கடும் வெப்பத்தில் பலவிதங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்கள் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி, இஞ்ஞாயிறன்று தமிழகம் புறப்பட்டு விட்டனர்.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் போன்றவை வறண்டு விட்டன.  நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குள் போய்விட்டது. எனவே, விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் சிறிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதற்கு, பெரிய அணைகளில் இருந்து கால்வாய்களை வெட்ட வேண்டும். செயற்கைக்கோள் உதவியுடன் நீர் நிலைகளைக் கண்டறிந்து ஏரிகளையும் அணைகளையும் கட்ட வேண்டும், தமிழ் நாட்டின் ஊட்டியிலுள்ள மோயர் (Moyar) ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மேலோங்கி வருகின்றன. ஏனென்றால், மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானி சாகரிலும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கின்றன. இந்தியாவில் 120 கோடிப் பேர் உள்ளனர். ஆள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் அளித்தால் 120 கோடி ரூபாய் வசூலாகும். அதுபோல, ஆண்டுதோறும் நிதி திரட்டி அதன் மூலம் இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்கலாம். இவ்வாறு அப்துல் கலாம் அவர்கள், நதிகளை இணைக்க ஏற்கனவே ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் இவ்வேளையில், தமிழக இளையோர், அப்துல்கலாம் கண்ட இக்கனவை நனவாக்கத் தீர்மானித்துள்ளனர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

தமிழக அரசியல் தலைவர்களை நம்பிப் பயனில்லை என, தமிழக இளையோர், பொதுநலன் காக்க தீவிரமாக முனைந்து விட்டனர். ஊட்டியில் அணை கட்ட நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர் இளையோர். தமிழகத்தில் ஏறக்குறைய ஏழு கோடி மக்கள் உள்ளனர். தலா ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் வசூல் செய்ய முடிவு செய்துள்ளனர். நிதி திரட்டுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியில் இறங்கியுள்ள தமிழக இளையோரைப் பாராட்டுவோம், அவர்களுக்கு ஆதரவளிப்போம்.  மேலும், தமிழகத்தில் குடிநீருக்கே மக்கள் அலைந்து கொண்டிருக்கும் இந்நாள்களில், மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே, நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி கோயில் தெப்பம், நீர் நிரம்பி காணப்படுகின்றது. இது குறித்து கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் அவர்கள், தி இந்து தினத்தாளிடம் இவ்வாறு கூறியிருக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களுக்குமுன் எங்கள் பகுதியில் மழை பெய்தது. அருகே உள்ள நக்கனேரி கண்மாயில் தண்ணீர் வந்தது. அப்போது கண்மாயில் இருந்து ஏறக்குறைய 2 கி.மீ. தூரம் தெப்பத்துக்கு வரும் வாய்க்காலை தூர்வாரி நக்கனேரி கண்மாயில் இருந்து இந்த தெப்பத்துக்கு தண்ணீர் கொண்டு வந்தோம். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் தெப்பத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக மக்கள் ஒத்துழைப்போடு வாய்க்காலை தூர்வாருவோம். இதனால் தண்ணீர் வீணாகாமல் தேக்கி வைக்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் இந்த குளத்தில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். பிற ஊர்களில் தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட நல்லமரம் கிராமத் தெப்பம் தண்ணீரோடு வளமாக இருக்கும். கண்மாயில் இருந்து தெப்பக்குளம் வரை, அரசு வாய்க்கால் கட்டிக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார் முருகன். இதில், கல்லுப்பட்டி இளையோரின் பங்கு முக்கியமானது.

தமிழகத்தின் அரசியல்நிலை ஒருபுறமிருக்க, “கொழும்பில் நடக்கும் குப்பை அரசியலும் மே தின அரசியலும்” என்ற தலைப்பில், ஊடகச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மீதொட்டமுல்லையில் உள்ள குப்பைமேடு சரிந்து விழுந்ததில், முப்பதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. வீடுகள் சேதமடைந்ததால் 645 குடும்பங்கள் துன்பத்திற்குள்ளாகியுள்ளன. மீதொட்டமுல்லையில் குப்பை கொட்டுவது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் வழக்கமாகும். அங்கே குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என்று, அப்பகுதியில் வாழும் மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவார்கள். பின்னர் அவர்களை அதிகாரிகள் சமாளித்து மீண்டும் அங்கேயே குப்பைகளைக் கொட்டுவார்கள். அந்தக் குப்பை மேடு சரிந்ததில் இப்போது, குப்பை அரசியல் முன்னரங்கிற்கு வந்துள்ளது என்றும், குப்பை அரசியல் வேண்டாமே என்றும், இந்த ஊடகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இலங்கையில், உள்நாட்டுப் போரின்போது, காணாமல்போனவர்கள் குறித்த விபரங்களை அரசு வெளியிட வேண்டும் என, 64வது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

நாடுகளில், அப்பாவி மக்கள் அதிகமாகத் துன்பப்படுவதற்கு முக்கிய காரணங்கள் பதவி ஆசையும், பண ஆசையும் என்று சொல்லலாம். பதவியும், பணப்பதுக்கலும், ஆதிக்க வெறியும், ஆக்ரமிப்பும், நாற்காலிகளைப் பிடிப்பதிலே கவனம் செலுத்துகின்றன. பதவி வெறி, பண வெறி இவை இரண்டுடன் உறங்குவது நல்ல பாம்புடன் உறங்குவதுபோல் என்று, ஒரு மருத்துவர் சொல்கிறார். அது எந்த நேரத்திலும் உயிரைப் பறித்துவிடும். இவையிரண்டுக்கும் வாழ்வு கொடுக்கத் தொடங்கினால், அவை வாழ்வு கொடுத்தவரையே படிப்படியாகக் கொலை செய்துவிடும். ஓர் அதிகாரி பதவி உயர்வு பெற்று ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாராம். அப்போது, அந்த நாற்காலி சொன்னதாம் - இதற்குமுன் இதில் நூறு பேர் அமர்ந்துள்ளனர் என்று. பதவி வெறியும், எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டுமென்ற வெறியும் மனிதரை நடைபிணங்களாக்குகின்றன. சிறைகளில் கம்பி எண்ணவும் வைக்கின்றன. இந்த எதார்த்தத்தை தமிழகத்திலே நாம் பார்த்து வருகிறோம். அந்தத் தோட்டத்தில் நிறையக் குரங்குகள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தன. அதனால், அந்தத் தோட்டக்காரருக்கும் அவை நண்பர்களாகி, தோட்டக்காரர் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து அவற்றைச் செய்து விளையாடும். ஒருமுறை தோட்டக்காரர் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விடயத்தைச் சொன்னார். குரங்குகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை என்றன குரங்குகள். ''அது ஒண்ணும் பெரிய பிரச்சனயில்லை. வேர் பெரிதாக இருந்தால் நிறையத் தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்தா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னார் தோட்டக்காரர். வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரருக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றார் தோட்டக்காரர். 'வேர் பெரிதா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறதற்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள். தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தால், விளைவு இப்படித்தான் மோசமாக இருக்கும்.

கோடி கோடியாய், பெட்டி பெட்டியாய் பொன்னையும் பொருளையும் சேர்த்தவர்களின் இறுதி வாழ்வு பற்றி நாம் அறிவோம். தன் மரணம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், மாவீரர் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து, தனது இறுதி ஆசையாக, மூன்று காரியங்களைக் கூறினார்.

1. என்னுடைய சவப்பெட்டியை தலைசிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். 2. நான் இதுவரை சேர்த்த பணம், தங்கம், விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும். 3. என் கைகளைச் சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.

தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் இந்த விந்தையான விருப்பத்தால் மிகவும் வியந்து அதனை விவரிக்கும்படி கேட்டார்.  அதற்கு அலெக்ஸாண்டர்

1. தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவைத் தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு உணர்த்துவதற்காக! 2. நான் இந்த பூமியில் சேகரித்த, கைப்பற்றிய பொருள்கள் எல்லாமே இப்பூமிக்கே சொந்தமானவை என்பதை அறிவிப்பதற்காக! 3. எனது கைகள் காற்றில் அசையும்போது, வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை மக்கள் புரிந்து கொள்வதற்காக...என்று பதில் சொன்னார். நாம் இந்த உலகைவிட்டுப் பிரியும்போது பதவியும் பணமும் பொருளும் நம்முடன் வராது. நம் இறுதி நேரம் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. அவர் அழைக்கும் நொடியில் அவகாசம் கேட்கவே முடியாது. எனவே நிரந்தரமில்லா வாழ்வில், நிலையில்லா ஆசைகளை விட்டொழித்து, அன்புணர்வால் வாழ்வை நிரப்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.