2017-04-24 16:10:00

'வெள்ளை ஞாயிறு' - திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்துரை


ஏப்.24,2017. உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறு, 'வெள்ளை ஞாயிறு' என்று அழைக்கப்பட்ட பாரம்பரியத்தின் பின்னணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 23, ஞாயிறன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் விளக்கிக் கூறினார்.

இஞ்ஞாயிறு நண்பகலில், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியத் திருத்தந்தை, உயிர்ப்பு பெருவிழாவன்று திருமுழுக்கு பெற்றவர்கள், தொடர்ந்து ஏழு நாள்கள் வெள்ளை உடையணிந்து வந்தனர் என்றும், உயிர்ப்புக் காலத்தின் 2ம் ஞாயிறன்று, தங்கள் வெள்ளை உடையைக் களைந்து, வேற்று உடைகளுடன், இறைமக்களின் குழுமத்தில் ஒருவராக இணைந்தனர் என்றும், 'வெள்ளை ஞாயிறு' பாரம்பரியத்தைக் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், இஞ்ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறாக, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் நிறுவியுள்ளதைக் குறித்தும் தன் உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு நாம் சிறப்பித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினைத் தொடர்வதற்கு, இந்த ஞாயிறு நம்மைச் சிறப்பாக அழைக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

உயிர்த்தபின் தன் சீடர்களைச் சந்திக்கும் இயேசு, தூய ஆவியாரைப் பொழிவதன் அடையாளமாக அவர்கள் மீது ஊதி, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு அளித்து, அவர்களை உலகெங்கும் அனுப்பினார் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, மன்னிப்பை அறிவிப்பதே, உயிர்த்த கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழும் அனைத்து கிறிஸ்தவரின் முதல் கடமை என்பதை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.