சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்களுக்காக திருத்தந்தை செபம்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்

25/04/2017 16:30

ஏப்.25,2017. சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், எகிப்து நாட்டு காப்டிக் திருத்தந்தை முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் (Tawadros II) அவர்களுக்காகவும், காப்டிக் கிறிஸ்தவ சபை சகோதரர்களுக்காகவும் செபித்தார்.

எகிப்தின் அலெக்சாந்திரியா திருஅவையை நிறுவிய புனித மாற்கு திருவிழாவாகிய இந்நாளில், இத்திருப்பலியை, எனது சகோதரர் காப்டிக் திருத்தந்தை 2ம் தவாத்ரோஸ் மற்றும், அச்சபையின் விசுவாசிகளுக்காக அர்ப்பணிக்கின்றேன் என்று கூறி, திருப்பலியைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இன்னும் மூன்று நாள்களில் எகிப்துக்கு, திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும்போது, திருத்தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களையும், அச்சபையினரையும் சந்திப்பேன், தூய ஆவியார், அச்சபையினர் மீது நிரம்பப் பொழியப்படுமாறு நம் ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் எனவும் திருத்தந்தை கூறினார்.  

மேலும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எகிப்தில், திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றதென, அந்நாட்டில் பணியாற்றும் கொம்போனி சபை அருள்சகோதரி ஆஞ்சலா கொலம்பி அவர்கள், வத்திக்கான் வானொலியில் கூறினார்.

கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து மக்களும் திருத்தந்தையின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர் எனவும், இத்திருத்தூதுப் பயணம் திருக்குடும்ப திருப்பயணத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அச்சகோதரி கூறினார்.

எகிப்தின் ஏறக்குறைய 9 கோடி மக்களில், 89 விழுக்காட்டினர் சுன்னிப் பிரிவு முஸ்லிம்கள். ஏறக்குறைய பத்து விழுக்காட்டினர், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். 0.1 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

25/04/2017 16:30