2017-04-25 16:37:00

திருக்குடும்பம் பார்வையிட்ட நாட்டிற்கு வருவதில் மகிழ்ச்சி


ஏப்.25,2017. எகிப்து நாட்டுக்கு, திருப்பயணியாகவும், நண்பனாகவும், அமைதியின் தூதுவனாகவும் வருவதில் உண்மையிலே மகிழ்கின்றேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

வருகிற வெள்ளி, சனி ஆகிய நாள்களில் (ஏப்ரல் 28,29) எகிப்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் அனைத்து மக்களுக்கென அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன், ஏரோது மன்னனின் அச்சுறுத்தலால் எகிப்துக்கு வந்த திருக்குடும்பத்திற்கு, அந்நாடு அடைக்கலம் அளித்து உபசரித்தது என்றும், திருக்குடும்பம் பார்வையிட்ட ஒரு நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதை, உண்மையாகவே பெருமையாகக் கருதுகிறேன் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

கலாச்சாரத்தின் தொட்டில், நைல் நதியின் கொடை, கதிரவனின் நிலம், உபசரிப்பின் பூமி, முதுபெரும் தந்தையரும், இறைவாக்கினரும் வாழ்ந்த மண், மற்றும், இரக்கமும், நன்மைத்தனமும் நிறைந்த எல்லா வல்லமையும் நிறைந்த இறைவன் தம் குரலைக் கேட்கச் செய்த இடமாகிய எகிப்து நாட்டுக்கு வருவதில் என் இதயம் மகிழ்வாலும் நன்றியாலும் நிறைந்துள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. 

தனக்கு அழைப்பு விடுத்த எகிப்து அரசுத்தலைவர், அந்நாட்டு காப்டிக் திருத்தந்தை முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ், அல் அசார் முஸ்லிம் மதத் தலைவர், கத்தோலிக்க காப்டிக் முதுபெரும் தந்தை, இத்திருத்தூதுப் பயணத்திற்காக உழைத்தவர்கள் என, எல்லாருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய கிழக்கில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்கள் மீது தான் கொண்டிருக்கும் அன்பிற்கும், ஊக்கத்திற்கும் சான்றாகவும், எகிப்திலும், மத்திய கிழக்கிலும் வாழ்கின்ற மக்களுக்கு, நட்பு மற்றும் மதிப்பின் செய்தியாகவும், ஆபிரகாமின் பிள்ளைகளோடு, குறிப்பாக, முஸ்லிம் உலகோடு உடன்பிறந்த உணர்வு மற்றும், ஒப்புரவின் செய்தியாகவும் இப்பயணம் அமைகின்றது என்றும், இஸ்லாம் மதத்தவரோடு பல்சமய உரையாடல் மற்றும், மதிப்புக்கும், அன்புக்கும் உரிய ஆர்த்தடாக்ஸ் சபையோடு கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் இடம்பெறவும், இப்பயணம் உதவும் என நம்புகிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நம் உலகம், கண்மூடித்தனமான வன்முறையால் கிழிக்கப்பட்டுள்ளது, இந்த வன்முறை உங்களின் அன்புக்குரிய நாட்டையும் பாதித்துள்ளது, நம் உலகத்திற்கு அமைதி, அன்பு மற்றும், இரக்கம் தேவைப்படுகின்றன, இதற்கு அமைதி ஆர்வலர்கள் தேவைப்படுகின்றனர், முற்சார்பு எண்ணங்களற்ற வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு, கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட துணிச்சலான மனிதர்கள் தேவைப்படுகின்றனர், இந்த உலகத்திற்கு, அமைதி, உரையாடல், உடன்பிறந்த உணர்வு, நீதி, மற்றும் மனிதாபிமானப் பாலங்களைக் கட்டும் மனிதர் தேவைப்படுகின்றனர் என்றும், தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

தனக்காகச் செபிக்குமாறும் இறுதியில் கேட்டுள்ள திருத்தந்தை, எகிப்து நாட்டினருக்காகச் செபித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.