2017-04-25 16:19:00

திருத்தந்தை - நற்செய்தியை தாழ்ச்சியோடு அறிவிக்க வேண்டும்


ஏப்.25,2017. நற்செய்தியை அறிவிக்கும்போது எதிர்கொள்ளும் சோதனைகளை விலக்கி, தாழ்ச்சியோடு அதனை அறிவிக்க வேண்டும் என்று, நற்செய்தியாளர் புனித மாற்கு திருவிழாவான இச்செவ்வாய் (ஏப்.25) காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித மாற்கு நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள, இயேசு தம் சீடர்களை நற்செய்தியை பறைசாற்ற அனுப்பிய பகுதியை மையப்படுத்தி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அறிவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தம் சீடர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியைக் கொடுத்தபோது, எருசலேமில் தங்கியிராமல், வெளியே சென்று எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்குமாறு பணித்தார் என்றார்.

இயேசு அறியப்படாத, இயேசு துன்புறுத்தப்படுகின்ற அல்லது இயேசு உருவமிழந்து இருக்கின்ற இடங்களுக்கு, கிறிஸ்தவர்கள், உண்மையான நற்செய்தியை அறிவிக்கச் செல்ல வேண்டும் என்றும், நற்செய்தியை அறிவிக்கச் செல்லும்போது, ஒருபோதும் நின்றுவிடாமல், எப்போதும் பயணம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

நற்செய்தியை அறிவிக்கும்போது, உலகப்போக்கின் சோதனைகளுக்கு உட்படாமல், தாழ்ச்சியோடு அறிவிக்க வேண்டும் எனவும், இந்த அறிவிப்பு கார்னிவல் கொண்டாட்டம் அல்ல என்றும் கூறியத் திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பாளர், வாழ்வு காப்பீட்டுத் திட்டத்தைத் தேடினால், அவர் உண்மையான நற்செய்தி அறிவிப்பாளர் இல்லையென்றும் கூறினார்.

நற்செய்தி அறிவிப்பில், அதிகாரம், தற்பெருமை, உலகப்போக்கு போன்ற பல சோதனைகள் உண்டு என்றும், இதில் சோதனைகளே வரவில்லை எனச் சொன்னால், அறிவிப்பாளர், பயனற்ற எதையோ அறிவிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

நம் சோதனை நேரங்களில் நம் ஆண்டவர் உடனிந்து நம்மைத் தேற்றி, முன்னோக்கிச் செல்ல சக்தி கொடுக்கிறார் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்புக்கு நாம் பிரமாணிக்கமாய் இருந்தால், ஆண்டவர் நம்மோடு சேர்ந்து பணியாற்றுகின்றார் என்றும் கூறினார்.  

திருப்பீட சீர்திருத்தத்தில் தனக்கு ஆலோசனை வழங்கும் C-9 கர்தினால்கள் குழுவுடன்  இத்திருப்பலியை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.