2017-04-25 14:33:00

பாசமுள்ள பார்வையில் - கடவுளோடு மதிய உணவு


சிறுவன் ஆகாஷ் கடவுளைக் காண ஆசைப்பட்டான். அவரைக் காண அதிக தூரம் போகவேண்டும் என்று, அவனாகவே கற்பனை செய்துகொண்டதால், பயணத்திற்குத் தேவையான பழங்கள், சாக்லேட்டுகள், குளிர்பானம் எல்லாவற்றையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

சிறிது தூரம் சென்ற ஆகாஷ், அங்கிருந்த ஒரு பூங்காவில் நுழைந்து, அங்கு அமர்ந்திருந்த வயதான ஒரு பாட்டிக்கு அருகே அமர்ந்தான். தன் பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்து சாப்பிட நினைத்த ஆகாஷ், பாட்டி பசியுடன் இருப்பார் என்று நினைத்து, அவரிடம் அந்தப் பழத்தைக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட பாட்டி, அழகாகச் சிரித்தார்.

சிறிது நேரம் சென்று, ஒரு சாக்லேட்டையும், குளிர் பானத்தையும் பாட்டிக்குக் கொடுத்தான் ஆகாஷ். அவன் தந்ததையெல்லாம் அழகான புன்னகையோடு பாட்டி வாங்கி சாப்பிட்டார். ஆகாஷ் அங்கிருந்து புறப்படும்போது, பாட்டியை சிறிது நேரம் கட்டிப்பிடித்தான். பாட்டியும், ஆனந்த புன்னகையுடன், ஆகாஷைக் கட்டிப்பிடித்து, நெற்றியில் முத்தமிட்டு அனுப்பிவைத்தார்.

ஆகாஷ் வீட்டுக்குள் நுழைந்ததும், அவன் தாய், "ஆகாஷ், இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறாயே. என்ன நடந்தது இன்று?" என்று கேட்டார். ஆகாஷ் அம்மாவிடம், "இன்று நான் கடவுளோடு மதிய உணவு சாப்பிட்டேன். கடவுள் எவ்வளவு அழகாய் சிரித்தார் தெரியுமா!" என்று சொன்னான்.

வயதான பாட்டி, அவரது வீட்டுக்குத் திரும்பியதும், அவரது மகன், "என்றைக்கும் இல்லாமல் இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே! காரணம் என்னம்மா?" என்று கேட்க, பாட்டி அவரிடம், "இன்று நான் கடவுளோடு மதிய உணவு சாப்பிட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட, கடவுளுக்கு ரொம்ப சின்ன வயசு!" என்று கூறினார்.

பாசமுள்ள பார்வையில் பரமன் வாழ்கிறார். கனிவுள்ள நெஞ்சில் கடவுள் கோவில் கொள்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.