2017-04-28 16:46:00

கலாச்சாரத்தின் தொட்டில் எகிப்து


ஏப்.28,2017. எகிப்து, ஆப்ரிக்கக் கண்டத்தின் வடகிழக்கு முனையிலும், ஆசியக் கண்டத்தின் தென்மேற்கு முனையிலும் உள்ள ஒரு குடியரசு நாடாகும். எகிப்திலுள்ள சீனாய் தீபகற்பம், தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இரு கண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே Gaza Strip மற்றும் இஸ்ரேலையும் எல்லைகளாகக் கொண்ட எகிப்தின் வடக்குக் கரையில் மத்தியதரைக் கடலும், கிழக்குக் கரையில் செங்கடலும் உள்ளன. வற்றா நதியாகிய நைல், இந்நாட்டில் பாய்கிறது. நைல் நதிக் கரையிலிருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. இந்நாட்டின் பெரும்பாலானவர்கள், நைல் நதிக்கரையில் இருக்கும் நாற்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியிலேயே வாழ்கின்றனர். உலகில், நவீன நாடுகளின் வரலாற்றில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடுகளில் ஒன்றான எகிப்து, கி.மு. பத்தாயிரம் ஆண்டில், உலகில் முதலில் உருவெடுத்த நாடுகளில் ஒன்றாக உள்ளது.  காலநிலை மாற்றத்தால் அல்லது அளவு மீறிய மேய்ச்சல் நிலப் பயன்பாட்டினால், அல்லது, இரண்டினாலும், கி.மு. எட்டாயிரம் ஆண்டளவில் மேய்ச்சல் நிலங்கள் பாலவனங்களாக மாறத் தொடங்கி, சகாராப் பாலைவனம் உருவானது. கலாச்சாரத்தின் தொட்டிலாக நோக்கப்படும் இந்நாட்டில், எழுத்துக்கள், வேளாண்மை, நகர்மயம், அமைப்பு முறையிலான மதம், மத்திய அரசு என, பழங்காலத்திலே வளர்ச்சி பெற்றிருந்தன. இந்நாடு, உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் 15வது இடத்தில் உள்ளது. பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய எகிப்தின் மன்னர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. உலக அதிசயங்களில் ஒன்றாக இன்றும் இவை நோக்கப்படுகின்றன. பெத்லகேமில் இயேசு பிறந்திருந்தவேளையில், ஏரோது மன்னனின் கொலைவெறியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, திருக்குடும்பம் எகிப்துக்குச் சென்றது. அக்குடும்பம், அங்கு சிறிது காலம் வாழ்ந்த பின்னர், நாசரேத்து திரும்பியது. எனவே, தொடக்க காலக் கிறிஸ்தவத்தின் மையங்களில் ஒன்றான எகிப்து நாடு, ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமயமாக்கப்பட்டது. இன்றும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடாகவே எகிப்து அமைந்துள்ளது. இந்நாட்டின் குறிப்பிடத்தக்க கலாச்சார, அரசியல் மற்றும் இராணுவ பலத்தால், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் உலகில், வல்லமை மிகுந்த நாடாக இது கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் நிறுவனம், அணி சேரா நாடுகள் அமைப்பு, அரபு கூட்டமைப்பு, ஆப்ரிக்க ஒன்றியம், இஸ்லாம் ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றிலும் எகிப்து உறுப்பு நாடாக உள்ளது. எகிப்தில் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாளாகும். இந்நாட்டின் தலைநகர் கெய்ரோ. ஏறக்குறைய 8 கோடியே 90 இலட்சம் பேர் வாழும் எகிப்தில், 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். 10 விழுக்காட்டினர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். 0.31 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இந்நாட்டில் கிறிஸ்தவர்கள் அடிக்கடி வெடி குண்டு தாக்குதல்களால் கொல்லப்படுகின்றனர் மற்றும் பலர் காயமடைகின்றனர்.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு வரும் கெய்ரோ நகரம், எகிப்தின் தலைநகர் மற்றும், அந்நாட்டின் பெரிய நகரமாகும். மத்திய கிழக்குப் பகுதியிலும், அரபு உலகத்திலும் பெரிய நகரமாகவும், உலகில் 15வது பெரிய நகரமாகவும் உள்ளது. பழங்கால எகிப்தோடு தொடர்புடைய இந்நகரில், புகழ்பெற்ற Giza பிரமிடும் உள்ளது. அப்பகுதியின் அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வின் மையாகவுள்ள இந்நகரம் கி.பி. 969ல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக அமைந்துள்ள செபக் கோபுரங்களால், இந்நகரம் ஆயிரம் கோபுரங்களின் நகரம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்நகரத்தில், உலகின் புகழ்பெற்ற Al-Azhar முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. ஒளிர்கின்ற என்ற பொருளுடைய இது, சுன்னி இஸ்லாம் பிரிவினரின் கல்விக்கூடமாகும். 969ம் ஆண்டில் இது கட்டப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.