2017-04-28 16:52:00

திருத்தந்தையின் எகிப்து நாட்டுத் திருத்தூதுப் பயணம்


ஏப்.28,2017. கிறிஸ்தவர்களை, அதிலும் குறிப்பாக, கத்தோலிக்கரைச் சிறுபான்மையாகக் கொண்டிருக்கும் எகிப்து நாட்டுக்கு, ஏப்ரல் 28, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை  10.15 மணிக்கு, ஃபியுமிச்சினோ பன்னாட்டு நிலையத்திலிருந்து, கெய்ரோவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த எகிப்து திருத்தூதுப் பயணத்திற்காக, ஏப்ரல் 27, வியாழன் மாலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று அன்னை மரியிடம் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து காரில் புறப்படுவதற்கு முன்னர், எகிப்து நாட்டு ஒன்பது புலம்பெயர்ந்தவர்களை, அவ்வில்லத்தில் சிறிது நேரம் சந்தித்தார் திருத்தந்தை. பாப்பிறையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajevskj அவர்கள், இந்த ஒன்பது பேரையும் அழைத்து வந்திருந்தார். இந்த விமானப் பயணத்தின்போது, இத்தாலி மற்றும் கிரீஸ் நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை. அமைதியின் திருப்பயணியாக, எகிப்துக்குச் செல்லும் நான், அந்நாட்டில், கத்தோலிக்க சமூகத்தையும், பல்வேறு மத விசுவாசிகளையும் சந்திக்கவுள்ளேன். இவ்வேளையில், இத்தாலிய மக்களுக்கு, ஆன்மீக, சமூக மற்றும் பொதுவான நல்வாழ்வு கிடைப்பதற்கு எனது மனம்நிறைந்த ஆசீரை வழங்குகிறேன் என, இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசுத்தலைவர் மத்தரெல்லா அவர்களும், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். மத்திய கிழக்கும், அரபு உலகமும் கடும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள இக்காலத்தில், அப்பகுதிக்கு அமைதி மிகவும் தேவைப்படுகின்றது. மனித விழுமியங்களையும், மதங்கள் மத்தியிலும், கிறிஸ்தவ சபைகள் இடையேயும் உரையாடலையும் ஊக்குவிக்க, திருத்தந்தை மேற்கொண்டு வரும் துணிச்சலான பணிகளை உறுதி செய்வதாய் இப்பயணம் அமைந்துள்ளது. தொன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள எகிப்திற்கு, திருத்தந்தை மேற்கொண்டுள்ள இப்பயணம் சிறப்புற அமைய, இத்தாலியர்கள் சார்பாக, தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, மத்தரெல்லா அவர்கள், அச்செய்தியில் கூறியுள்ளார்.   

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆல்இத்தாலியா A321 விமானத்தில், மூன்று மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து, எகிப்து தலைநகர் கெய்ரோவை, உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்குச் சென்றடைந்தார். கெய்ரோ விமான நிலையத்தில், எகிப்து அரசுத்தலைவரின் பிரதிநிதியாக வந்த அமைச்சர், அலெக்சாந்திரியா காப்டிக் க்தோதலிக்க முதுபெரும் தந்தை இப்ராஹிம் ஈசாக் செத்ராக் உட்பட பல முக்கிய தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். கெய்ரோ விமான நிலையத்திலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று, “Qasr al-Orouba” அரசுத்தலைவர் மாளிகையை அடைந்தார்  திருத்தந்தை. Heliopolis மாளிகை அல்லது கூட்டமைப்பின் மாளிகை எனவும் இது அழைக்கப்படுகின்றது. எகிப்திலுள்ள மூன்று அரசுத்தலைவர் மாளிகைகளில் இது ஒன்றாகும். 1910ம் ஆண்டு டிசம்பரில் கட்டப்பட்ட இம்மாளிகையில், நானூறு அறைகளும், 55 தனிப்பட்ட இடங்களும் உள்ளன. அங்கு திருத்தந்தைக்கு, அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. இவ்வரவேற்புக்குப் பின்னர், அரசுத்தலைவர் Abdel Fattah el-Sisi அவர்களை, மரியாதை நிமித்தம் தனியாகச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை.  பின்னர் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Al-Azhar மையம் சென்றார் திருத்தந்தை. Al-Azhar பல்கலைக்கழகம் மற்றும் Al-Azhar மசூதியின் தலைவரான Sheikh Ahmed el-Tayeb அவர்களை, மரியாதை நிமித்தம் தனியாகச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Al-Azhar கருத்தரங்கு மையம் சென்று, அமைதி பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பில், Sheikh Ahmed el-Tayeb அவர்கள் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அருளும், இரக்கமும் நிறைந்த இறைவன் பெயரால், அல் அசார் மற்றும் முஸ்லிம் அவையின் மூத்தவர்கள் பெயரால் வரவேற்கின்றேன். சமயத் தலைவர்களும், வல்லுனர்களும் அமைதிக்காக உழைத்து, நாடுகளின் துன்பங்களை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். போர்களால் தங்கள் தாய் நாடுகளைவிட்டு விட்டு வெளியேறும் மக்களில் பலர், தங்களை வரவேற்கும் புதிய இடங்களைச் சென்றடைவது நிச்சயமற்று உள்ளது. பல மனித உடல்களையும், மனிதப் பாகங்களும் கடற்கரையோரங்களில் பார்ப்பது கவலை தருகின்றது. இஸ்லாமுக்கு எதிராக வன்முறை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் எழும்போது, திருத்தந்தை இஸ்லாமுக்கு ஆதரவாகப் பேசுவதைப் பாராட்டுகிறோம். நாம் எல்லாரும் இணைந்து, நோயுற்றோர், பசியுற்றோர், பாகுபடுத்தப்படுவோர், போர் கைதிகள் போன்றோர்க்கு ஆதரவாக உழைப்போம். சுற்றுச்சூழலை, சுரண்டுகிறவர்களிடமிருந்து காப்பாற்றுவோம். இவ்வாறெல்லாம் உரையாற்றினார், அல் அசார் தலைவர் Sheikh Ahmed el-Tayeb.  

அல் அசாரில் நடைபெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர், Al-Masah ஐந்து நட்சத்திர அமைப்பிலான பயணியர் விடுதி சென்று, எகிப்து அரசுத்தலைவர், தூதரக அதிகாரிகள், எகிப்தின் பொது மக்கள் பிரதிநிதிகள் என, ஏறக்குறைய 800 பேருக்கு உரையாற்றுதல், எகிப்தின் காப்டிக் திருத்தந்தை முதுபெரும் தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களைச் சந்தித்துப் பேசுதல் ஆகிய இரண்டும், திருத்தந்தையின் எகிப்து திருத்தூதுப் பயணத்தின் முதல் நாளின் முக்கிய நிகழ்வுகளாகும். இச்சனிக்கிழமையன்று பயண நிகழ்வுகளை நிறைவு செய்து அன்று, இரவு 8.30 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எகிப்து திருத்தூதுப் பயணத்தைமுன்னிட்டு, திருத்தந்தை அந்நாட்டினருக்கு அனுப்பியிருந்த காணொளிச் செய்தியில், எகிப்து நாட்டுக்கு, திருப்பயணியாகவும், நண்பனாகவும், அமைதியின் தூதுவனாகவும் வருவதில் உண்மையிலே மகிழ்கின்றேன் திருக்குடும்பம் பார்வையிட்ட இந்நாட்டிற்கு வருவதில் பெருமையடைகிறேன் என்று, கூறியிருந்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணத்திற்காகச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.