2017-05-01 15:57:00

கத்தோலிக்க இயக்கத்தின் 150ம் ஆண்டு நிறைவில் திருத்தந்தை


மே 01,2017. வாழ்க்கைப் பாதையில் முன்னோக்கிய பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், சமுதாயத்தின் விளிம்புகளைத் தேடிச் செல்லவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு காலை புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் உரையாற்றினார்.

கத்தோலிக்க இயக்கம் என்றழைக்கப்படும் Catholic Action கழகத்தின் 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, உரோம் நகருக்கு வருகை தந்திருந்த 70,000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, இஞ்ஞாயிறு காலை புனித பேதுரு வளாகத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இக்கழகம், கத்தோலிக்கத் திருஅவைக்கு இதுவரை ஆற்றி வந்துள்ள பணிகளைப் பாராட்டி, நன்றி கூறினார்.

இத்தாலிய கத்தோலிக்க இயக்கத்தின் தூண்களாக விளங்கிய Giuseppe Toniolo, Armida Barelli, Piergiorgio Frassati, Antonietta Meo, Teresio Olivelli, Vittorio Bachelet, ஆகியோரை குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு நம்மைத் தூண்டவேண்டும் என்று கூறினார்.

தாங்கள் கடந்து வந்துள்ள வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்த்து திருப்தி அடைவதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து செல்லவேண்டிய பாதையை முன்னோக்கிப் பார்க்குமாறு இக்கழகத்தின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை.

கத்தோலிக்க இயக்கத்தின் இளையோரை, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, தூய ஆவியாரின் சக்தியைப் பெற்றவர்களாய், சமுதாயத்தின் விளிம்புகளில் ஒடுக்கப்பட்டோர் நடுவே அவர்கள் பணியாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

1867ம் ஆண்டு, Mario Fani, Giovanni Acquaderni என்ற இருவரால் 'இத்தாலிய கத்தோலிக்க இளையோர் சங்கம்' என்ற பெயரில் நிறுவப்பட்ட முயற்சி, இன்று வலிமை மிக்க கத்தோலிக்க இயக்கமாக பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.