2017-05-01 16:04:00

திருத்தந்தை வழங்கிய அல்லேலூயா வாழ்த்துரை


மே 01,2017. தான் மேற்கொண்ட எகிப்து பயணத்தில் துணையாக விளங்கிய அன்னை மரியாவுக்கு நன்றி கூறுவதாகவும், எகிப்து மக்களை இறைவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய அல்லேலூயா வாழ்த்துரையில் கூறினார்.

தங்கள் 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட உரோம் நகர் வந்திருந்த கத்தோலிக்க இயக்கத்தினரை சந்தித்து, உரை வழங்கியபின், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலேயே அல்லேலூயா வாழ்த்துரையை தொடர்ந்து வழங்கினார் திருத்தந்தை.

வெனிசுவேலா நாட்டில் நிலவி வரும் போராட்டங்கள் குறித்து தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, உரையாடல், ஒப்புரவு வழிகளை அந்நாட்டு மக்கள் விரைவில் காணவும், அங்கு நிலவும் வன்முறைகள் தீரவும், தன்னுடன் அனைவரும் இணைந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதேவண்ணம், மாசிதோனியா நாட்டிலும் அமைதி நிலவ, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் அல்லேலூயா வாழ்த்துரைக்குப்பின் விண்ணப்பித்தார்.

திருக்குடும்பத்தின் அருள்சகோதரிகள் துறவு சபையை நிறுவிய Leopoldina Naudet அவர்கள், ஏப்ரல் 29 சனிக்கிழமையன்று, வெரோனாவில், அருளாளராக அறிவிக்கப்பட்டார் என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

மிலான் தூய இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் 93வது ஆண்டு நிறைவுநாள் இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இறை வார்த்தையின் அடிப்படையில் இளையோரின் கல்வி கட்டியெழுப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.