2017-05-01 16:09:00

விமானப்பயணத்தில் செய்தியாளர்களுடன் பேசியத் திருத்தந்தை


மே 01,2017. அணு ஆயுதப் போர் ஒன்று உருவாகும் அளவு இன்றைய உலகில் மோதல்கள் எழுந்துள்ள வேளையில், ஐ.நா. அவைத் தலைவர்கள் உறுதியான தலைமைப் பொறுப்பை ஏற்று, உரையாடல் வழியில் அமைதியை உருவாக்க முயலவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து நாட்டிலிருந்து திரும்பி வரும் விமானப் பயணத்தில் கூறினார்.

ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின் இறுதியிலும், திரும்பிவரும் வழியில், செய்தியாளர்களுடன் ஒரு நேர்காணலை மேற்கொள்ளும் திருத்தந்தை, இச்சனிக்கிழமை மாலை, கெய்ரோவிலிருந்து உரோம் நகருக்கு வரும் வழியில், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

27 மணிநேரங்கள் நீடித்த எகிப்து பயணத்தின்போது, செய்தியாளர்கள் ஆற்றிய பணிகளுக்கு தன் நன்றியைக் கூறியத் திருத்தந்தை, தொடர்ந்து அவர்களோடு மேற்கொண்ட உரையாடல், 32 நிமிடங்கள் நீடித்தது.

தான் இதுவரை 18 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, தான் ஒரு நாட்டுக்குச் செல்வதால், அந்நாட்டு அரசின் அனைத்து கொள்கைகளையும், செயல்பாடுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக பொருள் இல்லை என்றும், ஒவ்வொரு நாட்டிலும் தான் கூறிய கருத்துக்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு, நன்னெறி, விவிலிய விழுமியங்களின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துக்கள் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே உருவான ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுந்தபோது, காப்டிக், இரஷ்ய, கத்தோலிக்க சமுதாயங்களுக்கிடையே உறவுகள் வளரவேண்டும் என்பதைக் குறித்தும், இச்சபைகளின் தலைவர்கள் அனைவர் மீதும், குறிப்பாக, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவர், 2ம் தவாத்ரோஸ் அவர்கள் மீதும், தனக்குள்ள பெரும் மதிப்பைக் குறித்தும், திருத்தந்தை பேசினார்.

வட கொரியாவைச் சுற்றி எழுந்துள்ள சூழல் தனக்கு கவலை தருகிறது என்றும், கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் எழும்போது, அவற்றிற்கு பேச்சு வார்த்தைகள் வழியே அரசியல் தீர்வுகள் காண முடியும் என்பதை தான் ஆழமாக நம்புவதாகவும் குறிப்பிட்டார், திருத்தந்தை.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்களைச் சந்திக்கும் திட்டம் எதுவும் உள்ளதா என்று எழுந்த கேள்விக்கு விடையளித்தபோது, உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்கள், தன்னைச் சந்திக்க விருப்பம் தெரிவிக்கும்போது, தான் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.