2017-05-01 16:25:00

வெனிசுவேலா போராட்டங்களுக்கு, ஆதரவாக அந்நாட்டு ஆயர்கள்


மே 01,2017. வெனிசுவேலா நாட்டில் நிகழும் அநீதிகளுக்கு, நற்செய்தி வழியில், மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்றும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டம் இன்றி, நம்பிக்கை இல்லை என்றும், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Diego Padrón அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்நாட்டில் இதுவரை நிகழ்ந்துள்ள போராட்டங்கள் Caracas நகரில் மட்டுமே நிகழ்ந்துவந்துள்ளன என்றும், இம்முறையோ வெனிசுவேலாவின் பல்வேறு நகரங்களில் மக்களின் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், ஆயர் Pérez Lavado அவர்கள் பீதேஸ் (Fides) செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தாலும், குறிப்பாக, இளையோர் இந்தப் போராட்டங்களில் முழு வீச்சுடன் பங்கேற்றாலும், மக்கள் மனதில் அச்சம் பெருமளவில் நிறைந்துள்ளது என்று, ஆயர் Lavado அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுவேலா நாட்டில், ஆளும் கட்சிக்கு எதிராக கடந்த பல நாட்களாக மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களில், இதுவரை, 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.