சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

சுரண்டலுக்குப் பலியாகும் தொழிலாளர் மறக்கப்படக் கூடாது

அலகாபாத் செங்கல்சூளையில் வேலைசெய்யும் பெண்கள் - AFP

02/05/2017 16:12

மே,02,2017. குடியேற்றதாரத் தொழிலாளர் மற்றும், மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் மக்கள் மறக்கப்படக் கூடாது, ஏனென்றால், இவ்விரு தரப்பு மக்களும், அமைப்புமுறை சாராத, மற்றும், சீருடை அணியாதத் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று, இந்திய ஆயர்களின் மே தினச் செய்தி கூறுகின்றது.

இந்திய ஆயர் பேரவையின், தொழிலாளர் பணிக்குழுத் தலைவர் ஆயர் ஆசுவால்டு லூயிஸ் (Oswald Lewis) அவர்கள், தொழிலாளரான புனித யோசேப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே தினத்திற்கென வெளியிட்ட செய்தியில், குடியேற்றதாரத் தொழிலாளர்களை மறக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்களையும், தங்களின் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக, தங்களின் வீடுகளைவிட்டு, புதிய இடங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள், ஆரம்பத்திலிருந்தே பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார், ஆயர் லூயிஸ்.

புதிய பணியிடங்களில் எதிர்கொள்ளும் கடினமான சூழல்களிலிருந்து தப்பித்துச் செல்வதற்கு இத்தொழிலாளர்கள் முயற்சிக்கும் போது, அடிக்கடி காணாமல்போகின்றனர், மனித வர்த்தகத்திற்கு உள்ளாகின்றனர், இறுதியில் அவர்கள் தனிமையை அனுபவிக்கின்றனர் எனவும், ஆயர் லூயிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள், 1955ம் ஆண்டில், தொழிலாளர் புனித யோசேப்பு விழாவை ஏற்படுத்தினார்.

2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் ஏறக்குறைய 120 கோடி மக்களில், 32 கோடியே 60 இலட்சம் பேர் குடியேற்றதாரத் தொழிலாளர்கள்.

மேலும், துருக்கி நாட்டில், சிரியா நாட்டு புலம்பெயர்ந்த சிறார் உட்பட, ஏறக்குறைய இருபது இலட்சம் சிறார், கட்டாய வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என, உலக தொழில் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

02/05/2017 16:12