2017-05-02 15:52:00

ஆண்டவர் கல்லாலான இதயத்தை சதையாலான மாற்றுபவர்


மே,02,2017. சட்டத்திற்குப் புறம்பே இருப்பவர்களைக் கண்டனம் செய்யும் கடின இதயங்களை, மென்மையாக ஆக்குபவர் நம் ஆண்டவர் என்று, இச்செவ்வாய் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். கடவுளின் கனிவு பற்றியும், கல்லாலான இதயங்களை அகற்றி, அவற்றில் சதையாலான இதயங்களை வைக்கும் கடவுளின் வல்லமை பற்றியும் கடின இதயத்தவர்க்குத் தெரியாது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித ஸ்தேவான், கல்லால் எறிந்து, மறைசாட்சியாக, கொல்லப்பட்ட நிகழ்வை விளக்கும், இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவக் கீழ்ப்படிதலின் சான்று பற்றிய சிந்தனைகளை வழங்கினார்.

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என, திருப்பாடல் 95ல் ஆண்டவர் மக்களை எச்சரிக்கிறார் என்றும், கல்லாலான இதயத்தை, சதையாலானதாக ஆண்டவர் மாற்றுவார் என்ற அழகான வாக்குறுதியை இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகக் கேட்கின்றோம் என்றும், சதையாலான இதயம், செவிமடுக்கவும், கீழ்ப்படிதலின் சான்றைப் பெறவும் சக்தியுடையது என்றும் திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியாரால் நிறைந்திருந்த புனித ஸ்தேவான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டார், ஆனால், மூடிய இதயம், கல்லாலான இதயம், தூய ஆவியாரைத் தன்னுள் அனுமதிப்பதில்லை என்றும் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தையைப் புரிந்துகொள்ளாமைக்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன எனவும் கூறியத் திருத்தந்தை, இதற்கு எடுத்துக்காட்டாக எம்மாவு சீடர்கள் பற்றிச் சொன்னார். 

எம்மாவு சீடர்களிடம் அச்சம் இருந்தது, அவர்கள் பிரச்சனைகளை விரும்பவில்லை, ஆயினும், அவர்கள் நல்ல மனிதர்கள், உண்மைக்குத் திறந்த உள்ளம் கொண்டிருந்தவர்கள் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

இச்சீடர்கள் போன்று, பல சந்தேகங்களோடும், பல பாவங்களோடும் நாம் இருக்கின்றோம், துன்பங்கள், சோதனைகளிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள விரும்புகிறோம், ஆயினும், நம் இதயங்களை வெம்மைப்படுத்தும் இயேசுவின் குரலைக் கேட்பதற்கு இடமளிப்போம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவுக்கும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கும் இடையே நடந்த சந்திப்பு பற்றி, மறையுரையின் இறுதியில் விளக்கினார் திருத்தந்தை. பிறர் மீது கல்லெறிய விரும்புபவர்களிடம் முதலில் உங்களையே நோக்குங்கள் என்பதே இயேசுவின் பதில் எனவும், இயேசுவின் பரிவன்பை, தம் வாழ்வையே கையளித்த இயேசுவின் மாபெரும் கீழ்ப்படிதலின் சான்றை, இன்று நாம் நோக்குவோம் எனவும், எப்போதும் சட்டத்திற்குள் தங்களை அடைத்துக் கொள்பவர்களே மற்றவரைக் கண்டனம் செய்வார்கள் எனவும், திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.