2017-05-03 16:58:00

அணு ஆயுதங்களிலிருந்து விடுதலை பெற்ற உலகை உருவாக்க...


மே 03,2017. அணு ஆயுதங்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்ற ஓர் உலகை உருவாக்க, திருப்பீடம் தன் முழு ஆதரவை அளிப்பதோடு, அதற்காக முழு வீச்சுடன் உழைக்கவும் தயாராக உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வியன்னாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbanczyk அவர்கள், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் குறித்து, வியன்னாவில் மே 2, இச்செவ்வாய் முதல், 12, வருகிற வெள்ளி முடிய நடைபெறும் கருத்தரங்கில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம், 1971ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போது, நீதி, உடன்பிறந்த உணர்வு என்ற விழுமியங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை திருப்பீடம் ஏற்றுக்கொண்டது என்பதை, அருள்பணி Urbanczyk அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒப்பந்தம் உருவாகி, 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அணு ஆயுத அழிவு குறித்த அச்சுறுத்தலிலிருந்து உலகம் விடுதலை பெறவில்லை என்பதை, அருள்பணி Urbanczyk அவர்கள், வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவிவரும் இறுக்கமான சூழலைக் குறித்து திருப்பீடம் மிகுந்த கவலை கொண்டுள்ளது என்பதை தன் உரையில் குறிப்பிட்ட அருள்பணி Urbanczyk அவர்கள், இந்தப் போர்ச் சூழலை, பேச்சு வார்த்தைகளின் வழியே தீர்ப்பதற்கு அனைத்துலக சமுதாயம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

போரற்ற உலகம் என்பதைக் காட்டிலும், அமைதியும் உடன்பிறந்த உணர்வும் நிலவும் உலகத்தை வளர்ப்பதில், திருத்தந்தையர் எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்ட அருள்பணி Urbanczyk அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக அமைதி நாளுக்கென வெளியிட்ட செய்தியிலிருந்து ஒரு சில மேற்கோள்களை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.