2017-05-03 16:43:00

பாப்பிறை சமுதாயவியல் கழகத்தின் நிறையமர்வு கூட்டம்


மே 03,2017. ஏப்ரல் 28, கடந்த வெள்ளி முதல், மே 2, இச்செவ்வாய் முடிய, உரோம் நகரில், பாப்பிறை சமுதாயவியல் கழகம் நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்திற்கு, திருத்தந்தை வழங்கியிருந்த செய்தி, இக்கூட்டத்தின் அமர்வுகளை வழி நடத்தியது என்று, இக்கழகத்தின் தலைவர் மார்கரெட் ஆர்ச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

"பங்கேற்பு நிறைந்த சமுதாயம் நோக்கி: சமுதாய, கலாச்சார ஒருங்கிணைப்பிற்குரிய புதிய வழிகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் நிறைவு நாளில், திருப்பீட செய்தித் தொடர்பகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், ஆர்ச்சர் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மனிதர்களை, பங்கேற்புள்ள சமுதாயமாகவோ,   ஒதுக்கிவைக்கும் சமுதாயமாகவோ  உருவாக்குவது, நம்மிடையே நிலவிவரும் கருத்துக்களே என்று கூறிய ஆர்ச்சர் அவர்கள், நல்ல கருத்துக்களை உருவாக்கும் பணி, பள்ளிகள், கல்லூரிகளைச் சார்ந்தது என்று சுட்டிக்காட்டினார்.

செல்வர், வறியோர் இடையே நிலவிவரும் இடைவெளி, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாவதே, சமுதாயப் பங்கேற்பிற்கு மிகப்பெரும் தடையாக உள்ளது என்பது, பாப்பிறை சமுதாயவியல் கழகத்தின் ஆண்டு கூட்டத்தில் ஆழமாக விவாதிக்கப்பட்டது என்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.