2017-05-03 17:02:00

"மும்பை மாநகராட்சியே, என் சிலுவையைக் கட்டிக்கொடு"


மே 03,2017. ஏப்ரல் 29ம் தேதி, மும்பையின் Bandra பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிலுவையை, மும்பை மாநகராட்சி இடித்ததை எதிர்த்து, மும்பை கத்தோலிக்க சமுதாயம், அமைதியான ஒரு போராட்டத்தை, மே 3, இப்புதனன்று மேற்கொண்டது.

"மும்பை மாநகராட்சியே, என் சிலுவையைக் கட்டிக்கொடு" என்ற விருதுவாக்குடன் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரும், கறுப்புத் துணியை தங்கள் கரங்களில் கட்டியிருந்தனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

பொது இடங்களில், பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மத அடையாளங்களை அகற்றும்படி உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவின்பேரில், தாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக மும்பை மாநகராட்சி கூறியுள்ளது தவறான தகவல் என்றும், இடிக்கப்பட்ட சிலுவை, தனியாருக்குச் சொந்தமான இடத்தில் யாருக்கும் இடையூறின்றி கடந்த 122 ஆண்டுகள் இருந்துள்ளது என்றும், மும்பை உயர் மறைமாவட்டம் அறிக்கையோன்றை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.