2017-05-04 16:55:00

மியான்மாரின் ஆங் சான் சூ சி, திருத்தந்தையுடன் சந்திப்பு


மே 04,2017. மியான்மார் அரசின் முதன்மை ஆலோசகரும், அந்நாட்டின் ஆளுங்கட்சியான தேசிய குடியரசு கட்சியின் தலைவருமான ஆங் சான் சூ சி (Aung San Suu Kyi) அவர்கள், இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

20 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், மியான்மார் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்தும் கருத்துக்கள் குறித்தும், அந்நாட்டில் தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் பேசப்பட்டதென்று, வத்திக்கான் செய்தித் துறை அறிவித்துள்ளது.

ஆங் சான் சூ சி அவர்கள், திருத்தந்தையை சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், திருப்பீடத்திற்கும், மியான்மார் அரசுக்கும் இடையே தூதரக உறவுகளைத் துவங்கும் விருப்பத்துடன், இவ்விரு நாடுகளும், இவ்வியாழனன்று, ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன என்று வத்திக்கான் செய்தித் துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.