2017-05-08 16:05:00

ஆஸ்திரேலியாவில் கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர்


மே,08,2017. கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டுவரும் பயணத்தில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து உரையாடினார்.

ஆஸ்திரேலியாவில் மேய்ப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க திருஅவைகளைச் சந்திக்கும் நோக்கத்துடன் அந்நாட்டில் இம்மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதிவரை மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுவரும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், ஞாயிறன்று, சிட்னியிலுள்ள லெபனின் நமதன்னை மாரோனைட் பேராலயத்தில் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களுக்கு திருப்பலி நிறைவேற்றினார்.

வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவது குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்த கர்தினால் சாந்த்ரி அவர்கள், சமுதாயத்தில் நல்மாற்றங்கள் இடம்பெற, இக்கிறிஸ்தவர்கள் புளிக்காரமாக செயலாற்றவேண்டும் என விண்ணப்பித்தார்.

தங்கள் சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்தோராக வெளியேறும் மக்களில் இறைவனும் துன்பங்களை அனுபவிக்கிறார் என்று கூறிய கர்தினால் சாந்த்ரி அவர்கள், போர், வன்முறை மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றப்படல் போன்றவை குறித்த கவலையையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.