2017-05-08 16:03:00

வாரம் ஓர் அலசல் – தினம் தினம் கற்க வேண்டிய பாடங்கள்


மே,08,2017. மேற்கு வங்காள மக்களால் ஏழைகளின் மருத்துவர் என அழைக்கப்படும் மருத்துவர் ஜாக் பிரெகர் (Dr Jack Preger MBE) அவர்கள், மே, ஐந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, இலண்டனில், இந்த ஆண்டின் சிறந்த மனிதநேய ஆசிய விருதைப் பெற்றுள்ளார். ஆசியர் அல்லாத ஒருவர், தனது வாழ்நாளின்போதே இவ்விருதைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு இந்த விருது புனித அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. மருத்துவர் ஜாக் பிரெகர் அவர்கள், இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் மருத்துவப் படிப்பை முடித்து பல்வேறு நாடுகளில் பணியாற்றினார். பிறகு, இந்நவீன உலகில் எவருமே கண்டுகொள்ளாத விளிம்பு நிலை மக்களுக்காகத் தொண்டாற்ற வேண்டும் என அவர் முடிவு செய்தார். அதன் பயனாக, கடந்த 1972ம் ஆண்டு, இந்தியாவின் மேற்கு வங்காளத்துக்கு வந்த ஜாக் பிரெகர் அவர்கள், அந்த மாநிலத்தில் சாலையோரத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவைகளை வழங்கத் தொடங்கினார். பின்னர் 'கொல்கத்தாவைப் பாதுகாப்போம்' என்ற தன்னார்வ அமைப்பை நிறுவிய அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இலவச கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார். இதுவரை ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர், ஜாக் பிரெகர் அவர்களால் பயன் பெற்றுள்ளனர். இவரது இந்த தன்னிகரற்ற சேவையைப் பாராட்டும் விதமாக, இந்த ஆண்டின் சிறந்த மனிதநேயத்துக்கான ஆசிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கும் விழாவில், இலண்டன் மேயர் சாதிக் கான், சச்சின் டென்டுல்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். பாதையோர மருத்துவர் என்ற பெயர் பெற்றிருக்கும் 86 வயது நிரம்பிய ஜாக் பிரெகர் அவர்கள், கடந்த 38 ஆண்டுகளாக, இந்தப் பிறன்புச் சேவையை ஆற்றி வருகின்றார்.

இந்த உலகில், வன்முறைகளும், ஊழல்களும் ஒருபுறம் நிறைந்திருந்தாலும், பல நல்ல மனிதநேய மனிதர்களும் வாழ்ந்து வருகின்றனர். பல மனிதநேயச் செயல்களும் இடம்பெற்று வருகின்றன. அமைதியின் பள்ளிகள் என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற இத்தாலிய தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட ஏறக்குறைய ஏழாயிரம் பள்ளிச் சிறாரை, மே 06, கடந்த சனிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறுதான் கூறினார். உலகில், பல நல்ல காரியங்கள் நடந்து வருகின்றன, பல நல்ல மனிதர்களும் உள்ளனர், ஆனால், உலகம் போரில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள் இவற்றில் குண்டுகள் விழுகின்றன, அங்கே, நோயுற்ற மக்கள், சிறார் உள்ளனர், இவர்கள் பற்றி கவலையின்றி குண்டுகளை வீசுகின்றனர். கடந்த காலத்தில் இந்த அழிவுகளில் ஒருசிலவற்றை புகைப்படங்கள் அல்லது தினத்தாள்களில் பார்ப்போம். ஆனால் இக்காலத்தில், இவற்றை, நேரிடையாகத் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். பிறருக்கு வாழ்வு கொடுக்கவும், சமூகங்கள் அமைதியில் வாழவுமே நம்மைக் கடவுள் படைத்திருக்கிறார். இந்த உலகெங்கும் அழிவுக் கலாச்சாரம் பரவியுள்ளது, ஆயினும் உலகில் நன்மைகள் உள்ளன, இவை அடிக்கடி கவனிக்கப்படாமலேயே போய் விடுகின்றன. ஒரு வெடிகுண்டின் பெயர், “எல்லாக்குண்டுகளின் தாய்” எனக் கேள்விப்பட்டபோது வெட்கமடைந்தேன். ''ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார். ஆனால், இது மரணத்தை மட்டுமே கொடுக்கிறது. மரணத்தைக் கொணரும் இந்தக் கருவியை தாய் என்று அழைக்கிறோம். என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஏப்ரல் 13ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஃப்கானிஸ்தானிலுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைக் குறிவைத்து வீசிய மிகப்பெரிய குண்டிற்கு, எல்லாக்குண்டுகளின் தாய் என புனைப்பெயரிடப்பட்டது. அணுஆயுதமற்ற இக்குண்டுத் தாக்குதலில் 36 தீவிரவாதிகள் பலியானார்கள் என ஊடகச் செய்திகள் கூறின. இக்குண்டு, ஏறக்குறைய 9,800 கிலோ எடை கொண்டது. Nangarhar மாநிலத்தில் ஐ.எஸ். குழுவினர் பயன்படுத்தி வந்த சுரங்கங்களை குறிவைத்து அமெரிக்க விமானம் ஒன்றின் மூலம் இக்குண்டு வீசப்பட்டதாக, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும், ஜெர்மனியின் ஹானோவர் நகரில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட ஐந்து வெடிகுண்டுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றைச் செயலிழக்க வைப்பதற்காக, பாதுகாப்பு கருதி ஐம்பதாயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர் என, இஞ்ஞாயிறு செய்திகள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போரில், ஜெர்மானியப் படைகள், 1945ம் ஆண்டு மே 8ம் நாளில்தான், நிபந்தனையின்றி சரணடைந்தன. இந்த உலகப்போர் முடிவுற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலானபோதிலும், ஜெர்மனியின் கிராமப்புறங்களில் வெடிக்காத குண்டுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதுபோல, உலகம் போரில் ஈடுபட்டு இருந்தாலும், நல்லவர்களும், நல்லவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பிறருக்காக தங்கள் வாழ்வையே வழங்கும் மக்கள் உள்ளனர், படுகொலைகள், பெரும் அழிவுகள் இவற்றுக்கு எதிராய்ச் செயல்படவும், இவற்றில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுகின்ற மக்களும் உள்ளனர். எனவே இந்த நல்லவைகளை நாம் ஏற்று, பயங்கரமான செயல்களுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இதன் வழியாக, நற்பணிகளை மறைவாய் ஆற்றும் மனிதர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவார்கள்.

மனதை நெகிழவைக்கும் காணொளி ஒன்றை அண்மையில் யூடியுப்பில் பார்க்க நேர்ந்தது. அது ஓர் அங்காடி. அங்கு ஒரு பாட்டி, தனது இரு சிறு பேரப் பிள்ளைகளுடன் சாமான்கள் வாங்கினார். அப்பிள்ளைகளில் ஒருவர், தனது தாத்தா பிறந்த நாளுக்கு இனிப்பு ஒன்றையும் ஆசையோடு எடுத்தார். கல்லாவில் சாமான்களுக்குப் பணம் கட்டியபோது அந்தப் பாட்டியிடம் போதுமான பணம் இல்லை. எனவே அந்த இனிப்பு உட்பட சில பொருள்களை அங்கேயே வைத்தார் அவர். ஆனால் அக்குழந்தைக்கு பாட்டி மீது கோபம். இதை அந்தக் கடையில் பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளைஞர், அந்த இனிப்பை வாங்கி, அந்தப் பாட்டி பின்னாலேயே சென்று வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்தார். அதை முதலில் வாங்க மறுத்தார் அந்தப் பாட்டி. பின் அந்த இளைஞரிடம், உங்கள் முகவரியைக் கொடுங்கள், நான் பிறகு இதற்குரிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கண்டிப்பாகச் சொன்னார். அப்போது அந்த இளைஞர், தனக்கு ஏழு வயது நடந்தபோது, இதேபோன்றதொரு ஒரு சம்பவம் நடந்தது என்று, அதை விளக்கினார். அப்போது ஒருவர் எனக்கு அந்த இனிப்பை வாங்கிக் கொடுத்தார். என் அம்மாவும், அவரிடம், முகவரியைக் கட்டாயமாக எழுதி வாங்கினார். அவர் ஒரு சிறிய தாளில் அதை எழுதிக் கொடுத்தார் என, அந்தத் தாளை, அக்குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு, நன்றி நிறைந்த நெஞ்சோடு திரும்பினார் இளைஞர். பிறகு, பேரப் பிள்ளைகள், தாத்தாவிடம் அந்த இனிப்பை வழங்கி பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்கள். எதற்கு வீண் செலவு என்று, தாத்தா பாட்டியிடம் கேட்டார். அன்று நடந்ததை பாட்டி விளக்கிக்கொண்டிருந்தபோதே, ஒரு பேரக்குழந்தை அந்தத் துண்டு காகிதத்தை அவரிடம் நீட்டியது. அதில் எழுதியிருந்தவர் வேறு யாருமல்ல, இந்தத் தாத்தாதான்.

இத்தகைய நல்ல சமாரியர்களை நாம் அவ்வப்போது சந்தித்து வருகிறோம். நாம் ஒருவருக்குச் செய்யும் உதவி, விருதாகவோ, தேவைப்படும்போது உதவியாகவோ எவ்வகையிலாவது நமக்குத் திரும்ப வந்து விடுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொன்னார் - ஏதோ நல்லது நடந்ததற்காக நாம் மகிழாமல், ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்பதற்காக மகிழ்வோம் என்று. வெயிலிலே இருக்கும் மண்பானையிடம் ஒருநாள் ஒருவர் கேட்டாராம் - இந்தக் கொளுத்தும் வெயிலிலும், நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் குளிர்ச்சியாகவே இருக்கிறாய் என்று. அதற்கு மண்பானை சொன்னதாம் - எனது ஆரம்பமும் முடிவும் மண்தான் என்பது எனக்குத் தெரியும். எவன் தன் தொடக்கத்தையும், முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான், குளிர்ந்தே இருப்பான் என்று. நம் கனவு நாயகர் அப்துல் கலாம் சொன்னார் - ஒருவர் தான் செய்வது சரியானது என்று நம்பினால், அதேநேரம், மக்கள் அதைக் குறைகூறி, அவர் மீது கோபம் கொண்டு, புண்படுமாறு பேசினால் அதைப் பற்றி அவர் கவலைப்படக் கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு விளையாட்டிலும், விளையாடுபவர்கள் அல்ல, பார்வையாளர்களே சப்தம் போடுவார்கள். எனவே வாழ்வில், விளையாடுபவர்களாக இருங்கள், உங்களையே நம்புங்கள், மிகச் சிறந்ததை ஆற்றுங்கள் என்று. எனவே, வாழ்வில் நல்ல செயல்கள் ஆற்றுகையில், எதிர்கொள்ளும் விமர்சனங்களால் பின்வாங்காமல், நல்ல காரியங்களைச் செய்துகொண்டே இருப்போம். நம் உண்மை நிலையை நாம் புரிந்துகொண்டு, வாழ்வில் தொடர்ந்து முன்னேறுவோம். நம் வாழ்வில் தினம் தினம் கற்க வேண்டிய பாடங்களும் ஆற்றவேண்டிய நற்செயல்களும் பல உள்ளன. பிறரின் வாழ்க்கைப் பாடங்களிலிருந்து பாடம் கற்று நற்செயல்கள் ஆற்றுவோம். திருத்தந்தை இத்திங்களன்று தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளது போன்று, இந்த நம் காலத்திற்கு அமைதியை அருளும் ஆண்டவரே எனச் செபிப்போம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.