2017-05-09 16:02:00

உண்மையைத் தேடுவதில் அறிவியலும், மதமும் ஒன்றிணைந்துள்ளன


மே,09,2017. அறிவியலும், மதமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, ஆனால், விண்வெளியின் புதிரானவைகளை வெளிப்படுத்துவதில் இடம்பெறும், தொடர் தேடுதலில் இவையிரண்டும் ஒன்றிணைந்துள்ளன என, வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

"விண்வெளியில் கரும்புள்ளிகள், மற்றும், புவிஈர்ப்பு அலைகள்" குறித்து, காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தில் இச்செவ்வாயன்று தொடங்கிய நான்கு நாள் கருத்தரங்கு பற்றி, இத்திங்களன்று செய்தியாளர்களிடம் அறிவித்த, வத்திக்கான் வானியல் ஆய்வு மைய இயக்குனர் இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno அவர்கள், இவ்வாறு கூறினார்.

நன்மையைக் கொணரும் அறிவியலுக்கு, திருஅவை ஆதரவளிக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்கும், பல்வேறு கருத்துக்களைக் கொண்ட மக்களைச் சந்திப்பதற்கும், இக்கருத்தரங்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்று, அருள்சகோதரர் Consolmagno அவர்கள், மேலும் கூறினார்.

பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக் கொள்கை எனப்படும், பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய கொள்கைகளை விவரித்த தந்தையர்களில் ஒருவரான, பெல்ஜிய நாட்டின் பேரருள்திரு George Lemaitre அவர்களின் அறிவியல் மரபுகளும், இக்கருத்தரங்கில் நினைவுகூரப்படும் என்றும், அருள்சகோதரர் Consolmagno அவர்கள், கூறினார்.

மே 09, இச்செவ்வாயன்று தொடங்கிய இக்கருத்தரங்கு, மே,12, வருகிற வெள்ளியன்று நிறைவடையும்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.