2017-05-09 15:22:00

திருத்தந்தை : தூய ஆவியாரைப் பணிவோடு வரவேற்போம்


மே,09,2017. தூய ஆவியாருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அவரைப் பணிவோடு  வரவேற்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தைப் பராமரித்துவரும் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய புனித லூயிசா தி மரிலாக் (Luisa di Marillac) அவர்களின் விழாவாகிய இச்செவ்வாயன்று, அச்சகோதரிகளின் கருத்துகளுக்காக திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, மறையுரையில் இவ்வாறு கூறினார்.

தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள், தாங்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளுக்கு மத்தியில், தூய ஆவியாருக்குப் பணிவோடும், திறந்த உள்ளத்தோடும் வாழ்ந்து வந்தது குறித்து, இந்நாள்களில் திருத்தந்தை வழங்கிவரும் மறையுரைச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக, இத்திருப்பலி மறையுரையும் இருந்தது.

புனித ஸ்தேவான் கொலைசெய்யப்பட்ட பின், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பரவலாக இடம்பெற்ற அடக்குமுறைகளில், சைப்பிரசு, பெனிசியா, அந்தியோக்கியா போன்ற இடங்களுக்குப் பல கிறிஸ்தவர்கள் சென்றனர், ஆயினும், இந்த அடக்குமுறைகள், கிறிஸ்தவர்களுக்கு புதிய வாய்ப்புக்களை அளித்தன என்று கூறினார் திருத்தந்தை.  

இறைவார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள் என, புனித யாக்கோபு தன் திருமுகத்தில் கிறிஸ்தவர்களிடம் கேட்கிறார், இவ்வாறு ஏற்பதற்கு, கடின இதயம் அல்ல, திறந்த மனம் அவசியம் என்று, மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தையை ஏற்பதற்கு முதலில் பணிவு தேவை எனவும், இரண்டாவதாக, அதை அறிவதற்கு, என் ஆடுகள் என் குரலை அறிந்திருக்கின்றன என்றுரைத்த இயேசுவை, அறிந்திருக்க வேண்டும் எனவும், மூன்றாவதாக, அதைப் புரிந்துகொள்வதற்கு, நம் இதயங்கள் தூய ஆவியாருக்குத் திறந்ததாய் இருக்க வேண்டுமெனவும் திருத்தந்தை கூறினார்.

இவற்றின்படி வாழ்பவரில், நன்மைத்தனம், கனிவு, மகிழ்வு, அமைதி, தன்னடக்கம் பணிவு ஆகிய பண்புகள் வெளிப்படும் என்றும், திருத்தந்தை கூறினார்.

அந்தியோக்கியாவில் முதலில் கிறிஸ்துவை அறிவித்தவர்கள் திருத்தூதர்கள் அல்ல எனவும், அங்குதான், முதல்முறையாகச் சீடர்கள், கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் எனவும் கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.