2017-05-10 16:11:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: நம்பிக்கையின் உயரிய மாதிரிகை


மே,10,2017. கடந்த பல வாரங்களாக தன் புதன் மறைக்கல்வி உரைகளில், கிறிஸ்தவ நம்பிக்கை குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக இவ்வாரம், அதுவும், பாத்திமா அன்னை திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கு இரு நாட்களுக்கு முன்னர், 'நம்பிக்கையின் அன்னை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இயேசு சிலுவையில் தொங்கியபோது, தம் தாயை தம் சீடரிடம் ஒப்படைத்த காட்சி, யோவான் நற்செய்தி பிரிவு 19லிருந்து முதலில் வாசிக்கப்பட்டது.

'சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்”என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்'(யோவா.19,25-27) என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நம்பிக்கையின் அன்னை மரியா' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரைகளில், இன்று நாம், நம்பிக்கையின் அன்னை மரியாவை நோக்கித் திரும்புவோம். இன்றைய உலகின் எண்ணற்ற அன்னையர்களின் மாதிரிகையாக, அன்னை மரியாவின் தாய்மை அனுபவம் உள்ளது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட புதிய வாழ்வை வரவேற்றதிலும், தனக்கு விடப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டதிலும், மனவுறுதியின் சாட்சியத்தை நாம் காண்கிறோம். வாழ்வின் இடர்பாடுகளுக்கு மத்தியிலும், இறைவிருப்பத்திற்கு அமைதியான முறையில், அதேவேளை, நம்பிக்கையுடன் கீழ்ப்படிவதன் சாட்சியாக அன்னை மரியா உள்ளார். இயேசுவின் வாழ்வைப் பற்றிப் பேசும் நற்செய்திகள், அன்னை மரியாவை, அவ்வப்போது வந்து முகம் காட்டும் ஓர் ஒளிக்கீற்றுப் போல், மிகக் குறைவாகவே பேசுகின்றன. அன்னை மரியா தன் மகனை மௌனமாகப் பின் தொடர்கிறார். இருப்பினும், அவரின் பாடுகளின்போது அனைத்துச் சீடர்களும் ஓடிவிட்டபோதிலும், அன்னை மரியா, இறுதிவரை தன் மகனுடனே இருக்கிறார். சிலுவையடியில் அன்னைமரியா நின்றது, எப்பாவமும் செய்யாத தன் மகனின் மரணம் குறித்து துயரமடைந்தது  போன்றவைகளை உற்று நோக்கும் கவிஞர்கள், ஒவ்வொரு காலத்திலும் அன்னை மரியாவை, இறைவனின் வாக்குறுதிகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த ஒரு மாதிரிகையாகக் காட்ட தூண்டப்பட்டுள்ளனர். செப வாழ்வு, மற்றும், இயேசுவின் விருப்பத்திற்கு ஒத்திணங்கிச் செல்வதன் தினசரி முயற்சியின் கனியான இந்த நம்பிக்கை, இயேசு புது வாழ்வுக்கு உயிர்த்தெழுந்ததில் நிறைவேறியது. நம்பிக்கையின் அன்னையாம் அன்னை மரியா, நம்மருகே இருந்து, தன் செபங்களால் நம்மைப் பலப்படுத்தி, நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரின் மகனைப் பின்பற்ற முயலும் நம் காலடிகளை வழிநடத்திச் செல்வாராக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் கலந்துகொண்ட, இந்தியா, இந்தோனேசியா, தாய்வான், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.